காலி பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த சுவீடன் நாட்டுப் பெண்ணொருவரின் அனுமதியின்றி அவரது உடலில் உள்ள அந்தரங்கப் பகுதிகளை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கதிரியக்கவியலாளர் ஒருவருக்கு எதிராக காலிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை எதிர்கொண்ட 32 வயதுடைய வெளிநாட்டுப் பெண், விலா எலும்புகள் தொடர்பான வலியின் காரணமாக குறித்த தனியார் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த வைத்தியர், இரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பல மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளார்.
மருத்துவப் பரிந்துரையின் பேரில் குறித்த பெண் ஸ்கேன் பரிசோதனைக்காகச் சென்றபோது, அந்தப் பரிசோதனையை மேற்கொண்ட அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற கதிரியக்கவியலாளர், அவரது அனுமதியின்றி அவரது அந்தரங்கப் பகுதிகளைத் தொட்டு அந்த இடங்களை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும், அது தொடர்பான எந்தவொரு அறிக்கையையும் தனக்கு வழங்கவில்லை என்றும் அவர் அளித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் காலி துறைமுகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரஞ்சன் கொடிதுவக்கு மற்றும் பொலிஸ் பரிசோதகர் பிரஷான் சில்வா ஆகியோரின் தலைமையில் மேலதிக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.