பொலன்னறுவை மாதுருஓயா ZD கால்வாயில் வெஹரகம பிரதேசத்தில் இருந்து ஒரு டிராக்டர் கவிழ்ந்ததால் நேற்று (26) முற்பகல் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. மெதகமவில் இருந்து வெஹரகம நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, டிரெய்லருடன் இந்த டிராக்டர் வீதியை விட்டு விலகி கால்வாயில் விழுந்துள்ளது.
அந்த சந்தர்ப்பத்தில், எதிர் திசையில் வந்த சிறிய லொரி வண்டிக்கு வீதியில் இடமளிக்க முயற்சித்த போது, சாரதியால் கட்டுப்படுத்த முடியாத டிராக்டர் இவ்வாறு கால்வாயை நோக்கி கவிழ்ந்துள்ளது. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி அதிசயமாக உயிர் தப்பியுள்ளதுடன், அவருக்கு எவ்வித பாரிய காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக டிராக்டருக்கு குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். குறித்த வீதி குறுகியதாகவும், கால்வாய் பாதுகாப்புப் பகுதிக்கு பாதுகாப்பு வேலி இல்லாததும் இவ்வாறான விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.