கம்பஹா, மல்வத்துஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் ஒரு மரக்கறி வியாபாரி 412 லீட்டர் டீசலை உரிமம் இன்றி தனது வீட்டில் சேமித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் (02) மாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தங்கோல்ல முகாமின் அதிகாரிகள் குழுவினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.
சந்தேகநபரான வியாபாரியும், தொடர்புடைய இரண்டு டீசல் பீப்பாய்களும் மேலதிக விசாரணைகளுக்காக மல்வத்துஹிரிப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை மேலும் தெரிவித்தது. இந்த வியாபாரிக்கு மூன்று லொறிகள் உள்ளன, அவர் தம்புள்ளை பொருளாதார மையத்திலிருந்து தொடர்ந்து மரக்கறிகளை ஏற்றிச் சென்று விற்பனை செய்பவர். மரக்கறி போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் தனது மூன்று லொறிகளுக்கும் தேவையான டீசலை எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து பெற்று வீட்டில் சேமித்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட மரக்கறி வியாபாரி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. சந்தேகநபரான வியாபாரி நேற்று (03) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.