கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் பௌதீக பரிசோதனை இன்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பாராளுமன்ற விசேட குழு, முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாளை (11) மீண்டும் அவரிடம் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.
சம்பவம் நடந்த நேரத்தில் நிலவிய கொள்கலன் நெரிசலைத் தவிர்ப்பதற்காக சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருந்தது என்று முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் குழுவிடம் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற விசேட குழு, தற்போதைய சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்ககோட மற்றும் பல தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடமும் கடந்த நாட்களில் விசாரணை நடத்தியது. மேலும், இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் விசாரணைகளை மேற்கொண்ட விசேட குழுவின் பிரதிநிதிகளிடமும் எதிர்வரும் நாட்களில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பதிவாகியது.
விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் 'சிவப்பு லேபிள்' கொண்ட கொள்கலன்களும் இருந்ததாக சுங்கத் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. இந்த கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் கடந்த நாட்களில் பாராளுமன்றத்திலும் வெளியிலும் பரவலாக விவாதிக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பாராளுமன்ற விசேட குழுவின் தலைவராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நானாயக்கார செயற்படுகிறார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த பாராளுமன்ற விசேட குழு நியமிக்கப்பட்டது. குழு அமைக்கப்பட்ட பின்னர், அதன் முதல் கூட்டம் நடைபெற்ற நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.