வாகன இலக்கத் தகடு அச்சிடுதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது

vehicle-number-plate-printing-resumes

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை புதிய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கும், அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் இன்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டது.




அதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வீதிப் போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை ஆகியோர் ஒன்றிணைந்திருந்தனர்.

அந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி மூன்று மாதங்களுக்குள் அந்த நிறுவனம் இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைத் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.




மேலும், இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு நீண்ட காலம் எடுத்ததாகவும், அதன்படி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதன் ஒப்புதலுக்குப் பிறகு சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பல சுற்று ஆரம்ப கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும், இரண்டு மாதங்களுக்குள் இந்த பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.



மேலும், இந்த திட்டம் சுமார் மூன்று பில்லியன் பெறுமதியான திட்டம் என்றும், இது இன்று முதல் ஐந்து வருட காலத்திற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க,

''வேரஹரவில் உள்ள எமது அலுவலக வளாகத்திலேயே இந்த பணிகள் அதிக இடவசதியுடன் தொடங்கப்படும். கிட்டத்தட்ட பத்து மாதங்களாக நாம் இலக்கத் தகடுகளை அச்சிடுவதை நிறுத்தி வைத்துள்ளோம். எனவே, இந்த அனைத்து பணிகளையும் முடிக்க எங்களுக்கு நேரம் எடுக்கும். எவ்வாறாயினும், ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தின் முதல் வாரத்தில் முடிந்தவரை விரைவாக பணிகளைத் தொடங்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். மூன்று மாதங்கள் ஆகாது. எமது ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்கியுள்ளோம்.. ஏற்கனவே அந்த நிறுவனம், வேரஹரவில் உள்ள எமது வளாகத்தில் ஆரம்ப கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது. அத்துடன், இன்றைய கலந்துரையாடலில், தேவையான அச்சிடும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று வாரங்களுக்குள் அந்த பணிகள் நிறைவடையும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்தது.''

Post a Comment

Previous Post Next Post