இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள சர்வதேச கடல் எல்லையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானிய போர்க்கப்பல் ஒன்று மூழ்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் 87 கடற்படையினர் உயிரிழந்துள்ளனர், இது வளைகுடாப் பகுதிக்கு அப்பால் இந்தியப் பெருங்கடல் வரை அமெரிக்க-ஈரான் மோதல்கள் பரவுவதற்கான ஒரு தீவிரமான அறிகுறியாகக் கருதப்படுகிறது.
இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர், இந்த கப்பல் ஈரானுக்கு சொந்தமான 'ஐரிஸ் டெனா' (IRIS Dena) என்ற போர்க்கப்பல் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இது இந்தியாவின் கிழக்கு துறைமுகத்திலிருந்து மீண்டும் ஈரானுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவத்திற்கு முகங்கொடுத்தது.அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் பென்டகனில் கருத்துத் தெரிவிக்கையில், சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பாகப் பயணம் செய்வதாகக் கருதப்பட்ட ஈரானியக் கப்பல், டார்பிடோ தாக்குதல் மூலம் அமைதியான மரணத்திற்கு ஆளாக்கப்பட்டது என்று கூறினார். தாக்குதல் தொடர்பான பென்டகன் வெளியிட்ட வீடியோ காட்சிகளின்படி, ஒரு பாரிய வெடிப்பினால் கப்பலின் பின்பகுதிக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது, அதன் பின்னர் அது படிப்படியாக கடலில் மூழ்கும் விதத்தை அவதானிக்கலாம். கப்பலின் வடிவம் மற்றும் பாய்மரம் குறித்த அவதானிப்புகள் இது ஈரானிய 'டெனா' கப்பல் என்பதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.
விபத்து தொடர்பான அவசர அழைப்பிற்கு உடனடியாக பதிலளித்த இலங்கை கடற்படை, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தது. இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர், கொமாண்டர் புத்திக சம்பத், மீட்புக் குழுக்கள் சம்பந்தப்பட்ட கடல் பகுதிக்குச் சென்றபோது கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தை மட்டுமே காண முடிந்தது என்று தெரிவித்தார். இருப்பினும், கடற்படை கடலில் மிதந்து கொண்டிருந்த 32 கடற்படையினரை உயிருடன் மீட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளது. விபத்து நடந்தபோது கப்பலில் சுமார் 180 பேர் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவர்களில் 87 பேரின் உடல்கள் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையின் சவக்கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் சுமார் 60 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உயிருடன் மீட்கப்பட்டவர்களில் கப்பலின் தளபதி உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளனர் என்றும், தமது கப்பல் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது என்று அவர்கள் இலங்கை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 'ஐரிஸ் டெனா' கப்பல் கடந்த பெப்ரவரி 18 முதல் 25 வரை வங்காள விரிகுடா கடற்பரப்பில் இந்தியா ஏற்பாடு செய்த 'மிலன்' என்ற பல்தேசிய கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுள்ளது. பெப்ரவரி 17 அன்று இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளை, இந்த ஈரானிய கப்பலை விசாகப்பட்டினம் துறைமுகத்தில் மரியாதையுடன் வரவேற்றதாக அவர்களின் உத்தியோகபூர்வ எக்ஸ் (X) கணக்கில் ஒரு பதிவையும் இட்டிருந்தது. ஆனால் கப்பல் மூழ்கிய சம்பவம் தொடர்பாக இந்திய கடற்படை இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.