
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தமது பதவிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். கிரிக்கெட் நிர்வாகத்தை பொறுப்பேற்க புதிய நிர்வாகத்தை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விடுத்த கோரிக்கைக்கு இணங்க, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற நீண்ட கலந்துரையாடலுக்குப் பிறகு அவர்கள் இந்த உடன்பாட்டிற்கு வந்துள்ளனர். அதன்படி, சம்பந்தப்பட்ட ராஜினாமா கடிதங்கள் புதன்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவிடம் ஒப்படைக்கப்படவிருந்தன. இவர்களை பதவிகளில் இருந்து நீக்குவதற்கு அரசியல் அதிகாரத்திற்கு உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து முந்தைய சம்பவங்களையும் ஆராய்ந்து கிரிக்பஸ், என்டிடிவி ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் தற்போது கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.தேசிய கிரிக்கெட் அணியின் பின்னடைவு மற்றும் வீரர்களிடமிருந்து எழுந்த பல்வேறு புகார்களை கருத்தில் கொண்டு, கடந்த மார்ச் மாதம் முதல் ஷம்மி சில்வாவை பதவியில் இருந்து நீக்குவது குறித்து அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இணைந்து நடத்திய கடந்த இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு கூட நுழைய முடியாமல் போனது, அரசாங்கத்தின் இந்த தலையீட்டிற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தாலும், இதுவரை எந்த உத்தியோகபூர்வ குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை என்றும், அவர்கள் உலகக் கோப்பை போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருமானத்தை அதிகரித்துள்ளதாகவும், 2029 ஆம் ஆண்டில் மேலும் ஒரு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) போட்டிக்கு புரவலராக இருக்கவுள்ளதாகவும் முன்னாள் கிரிக்கெட் தலைவர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
ஷம்மி சில்வா பதவி விலகிய பின்னர் ஏற்படும் வெற்றிடத்திற்கு தற்காலிக நிர்வாகக் குழுவை நியமிக்க அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி உறுப்பினருமான இரான் விக்கிரமரத்ன, அரசாங்கத்தின் பிரதிநிதியாக இந்த இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஜனாதிபதியின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த அதிகார மாற்றம் நடைபெறுவதால், நிறைவேற்றுக்குழுவின் சில உறுப்பினர்கள் தங்கள் எஞ்சிய பதவிக்காலத்தை நிறைவு செய்ய முயற்சித்தாலும், அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை.
2019 ஆம் ஆண்டில் உறுப்பினர் சங்கங்களின் பெரும்பான்மை வாக்குகளால் இலங்கை கிரிக்கெட் தலைவராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திலங்க சுமதிபாலவின் வாரிசான 65 வயதான ஷம்மி சில்வா, பின்னர் 2021, 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் போட்டியின்றி மீண்டும் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இந்தியாவின் ஜெய் ஷாவுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் அவர் பணியாற்றினார். தனது தற்போதைய பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில், அவர் தனது ஏழு ஆண்டுகால கிரிக்கெட் நிர்வாக சகாப்தத்திற்கு விடைபெற வேண்டியுள்ளது.
1973 ஆம் ஆண்டு விளையாட்டுச் சட்டத்தின்படி தேசிய விளையாட்டுச் சங்கங்களைக் கலைக்கும் அதிகாரம் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவில் அரசாங்கம் தலையிடுவது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) சாசனத்திற்கு எதிரானது. இதற்கு முன்னர், இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, டிசம்பர் மாதத்தில் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஷம்மி சில்வாவை பதவியில் இருந்து நீக்கி இடைக்காலக் குழுவை நியமித்தபோது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கையின் அங்கத்துவத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்ததுடன், 2024 ஜனவரியில் நடைபெறவிருந்த இளையோர் உலகக் கோப்பை போட்டியின் புரவலர் உரிமையும் தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டது. இருப்பினும், எதிர்காலத்தில் ஆறு மாதங்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்ற நிலை பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவனத்திலும் உருவாகியுள்ளது. அங்கு அமினுல் இஸ்லாம் தலைமையிலான குழுவை அரசாங்கம் நீக்கிவிட்டு, தமிம் இக்பால் தலைமையிலான புதிய குழுவை நியமித்துள்ளது. ஆனால் இது குறித்து ஐசிசியின் கடுமையான தலையீடோ அல்லது நடவடிக்கையோ இதுவரை எடுக்கப்படவில்லை.