ஜப்பானின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் (Nissan) நிறுவனம், அதன் பெரும் நிதி இழப்புகளுக்கு மத்தியில், பிரிட்டனின் சண்டர்லேண்டில் (Sunderland) அமைந்துள்ள அதன் பிரதான தொழிற்சாலையில் சீனப் போட்டி நிறுவனங்களுக்காக கார்களை உற்பத்தி செய்ய பரிசீலித்து வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இவான் எஸ்பினோசா (Ivan Espinosa) உறுதிப்படுத்தியுள்ளார். மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் 533 பில்லியன் யென் (2.5 பில்லியன் பவுண்டுகள்) நிகர இழப்பை பதிவு செய்துள்ள நிலையில், கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த நிறுவனம் தனது செலவுகளைக் குறைப்பதற்கும் இலாபகரமான நிலையை அடைவதற்கும் பல்வேறு மாற்று வழிகளைத் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.
சண்டர்லேண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 6,000 ஊழியர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக வெளித் தரப்பினருடன் இத்தகைய ஒத்துழைப்பை மேற்கொள்வது காலத்தின் தேவை என்று எஸ்பினோசா சுட்டிக்காட்டியுள்ளார்.சொந்த வாகனங்களுக்கான தேவை குறைந்துள்ளதால், சண்டர்லேண்டில் உள்ள இரண்டு உற்பத்தி வழித்தடங்களில் ஒன்றை மூடுவதற்கு நிசான் நிறுவனம் கடந்த வாரம் முடிவு செய்தது. இங்குள்ள உற்பத்தித் திறனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் அதிக வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும். இது தொடர்பாக நிசான் நிறுவனம் சீனாவின் செர்ரி (Chery) நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. செர்ரி நிறுவனம் தனது Chery, Jaecoo மற்றும் Omoda ஆகிய பிராண்டுகள் மூலம் பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய சந்தைகளை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையின்படி, வெளிப் பங்காளிகளுடன் ஒத்துழைக்கும் திறன் நிசான் நிறுவனத்திற்கு இருக்க வேண்டும் என்று கூறும் எஸ்பினோசா, தொழிற்சாலையில் உள்ள கூடுதல் இடத்தைப் பயன்படுத்த விரும்பும் எந்தவொரு தரப்பினருக்கும் தங்கள் கதவுகள் திறந்திருப்பதை வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய சந்தையில் சீன கார்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது, உற்பத்திச் செலவு குறைவாக இருப்பதால் சீன நிறுவனங்களுக்கு தங்கள் போட்டியாளர்களை விஞ்ச அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் நிசான் நிறுவனம் மட்டுமல்லாமல் ஃபோர்டு (Ford) மற்றும் ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) போன்ற பிற ஐரோப்பிய நிறுவனங்களும் தங்கள் பயன்படுத்தப்படாத தொழிற்சாலைகளில் சீன வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக கீலி (Geely) மற்றும் லீப்மோட்டார் (Leapmotor) போன்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. உலகின் மிகப்பெரிய மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான BYD நிறுவனமும் ஐரோப்பா முழுவதும் உள்ள குறைவாகப் பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகளை கையகப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
நிசான் நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாட்டு இலாபம் கடந்த ஆண்டை விட சுமார் 12 சதவீதம் குறைந்துள்ளது, வரும் ஆண்டில் இந்த நிலை மேலும் சவாலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் விதித்த இறக்குமதி வரிகள் மற்றும் சீன சந்தையில் நிலவும் கடுமையான போட்டி நிசான் நிறுவனத்தின் வருவாயை கடுமையாக பாதித்துள்ளது. ஐரோப்பா முழுவதும் நிசான் நிறுவனத்தின் சுமார் 900 ஊழியர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சண்டர்லேண்ட் தொழிற்சாலை போன்ற முக்கியமான மையங்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு இத்தகைய புதிய வணிக உத்திகள் முக்கியம் என்று நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.