
கடந்த 12ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வலல்லாவிட்ட பிரதேசத்தில் சந்தேகத்திற்குரிய தாயும் அவரது மைனர் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தெஹிவளை பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு நகைக்கடைக்கு வந்து, தங்க நகைகளை வாங்குவது போல் பாசாங்கு செய்து, உண்மையான தங்க மோதிரத்திற்குப் பதிலாக ஒரு போலி மோதிரத்தை மாற்றி, தப்பிச் சென்று மறைந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சட்டத்தின் பிடியில் சிக்கிய பிரதான சந்தேகநபர் வலல்லாவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவர் முப்பத்து மூன்று வயதுடையவர். இந்த திருட்டுகளுக்கு அவருடன் சம்பந்தப்பட்ட அவரது மகளின் வயது பதினைந்து என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த தாயும் மகளும் இணைந்து நாடு முழுவதும் பல்வேறு பிரதேசங்களில் உள்ள நகைக்கடைகளை இலக்கு வைத்து இதேபோன்ற பல திருட்டுகளைச் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ஹொரணை நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் நடந்த திருட்டு தொடர்பாகவும் இந்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள ஒரு நகைக்கடைக்குள்ளும் நுழைந்து இதேபோன்ற ஒரு திருட்டைச் செய்துள்ளமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளன.