4 மில்லியன் பேருக்கு இன்னும் ‘TIN’ எண்கள் இல்லையாம்

04-million-still-do-not-have-tin-numbers

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அண்மைய அறிக்கைகள், இலங்கையில் இதுவரை வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) எனப்படும் ‘டின்’ எண்ணைப் பெறாத சுமார் நான்கு மில்லியன் மக்கள் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு இலங்கை பிரஜைக்கும் இந்த எண்ணைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அதன்படி நாட்டில் டின் எண்ணை வைத்திருக்க வேண்டிய மொத்த மக்கள் தொகை 17 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், தற்போதைய தரவுகளின்படி, இதுவரை 13 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு மட்டுமே அந்த எண் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.




இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்தப்பட்ட சட்டமூலம் அமுலுக்கு வருவதன் மூலம், தனிநபர்களின் அன்றாட மற்றும் தொழில்முறை மட்டத்திலான பல முக்கிய பணிகளுக்கு இந்த டின் எண்ணை சமர்ப்பிப்பது சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனிமேல் புதிய வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கும், கடன் அட்டைகளைப் பெறுவதற்கும், பல்வேறு வணிகங்களைப் பதிவு செய்வதற்கும் இந்த எண் அத்தியாவசியமாக இருக்கும். மேலும், மோட்டார் வாகனப் பதிவு, வாகனங்களுக்கான வருடாந்த வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் மற்றும் நிறுவனப் பங்குப் பரிமாற்றங்கள் போன்ற பல்வேறு நிதி மற்றும் சட்டரீதியான பரிவர்த்தனைகளுக்கும் டின் எண் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வலியுறுத்துகிறது.

அத்துடன், சம்பந்தப்பட்ட புதிய திருத்தப்பட்ட சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளின்படி, இனிமேல் வரி செலுத்துவோர் அடையாள எண் எந்த வகையிலும் இரகசியத் தகவலாகக் கருதப்படாது.

Post a Comment

Previous Post Next Post