ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள கியாமா கடற்கரை நகரத்தின் பொது நூலகத்தில் இருந்து சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட ஒரு அரிய புத்தகம், மீண்டும் அதே நூலகத்திடம் ஒப்படைக்க ஒரு ஆஸ்திரேலியர் நடவடிக்கை எடுத்துள்ளார். "ஏதென்ஸின் பழம்பொருட்கள்" (Antiquities of Athens) என்ற கிரேக்க கட்டிடக்கலை பற்றிய இந்த பழைய புத்தகம் 1870 களின் நடுப்பகுதியில் நூலகத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டதுடன், பல தசாப்தங்களாக ஒரு வீட்டில் மூடப்பட்டிருந்த நெருப்பிடம் (fireplace) பின்னால் ஒரு பெட்டியில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த புத்தகம் அப்போதைய லண்டன் பாராளுமன்ற கட்டிட கட்டுமானத்திற்கு பங்களித்த ஜோன் சிம்மன்ஸ் என்ற ஒரு அமெச்சூர் கல் தச்சரால் மற்றும் பின்னர் ஆஸ்திரேலியாவில் ஒரு கட்டிடக் கலைஞராக பணியாற்றிய ஒருவரால் பெறப்பட்டிருக்கலாம். 1857 இல் ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த அவர், கியாமாவில் ஒரு மணற்கல் தேவாலயத்தை கட்டிய பின்னர் அப்பகுதியில் குடியேறினார். அவரது பேரன், 77 வயதான ரோஸ் சிம்மன்ஸ், தனது மூதாதையரின் கட்டிடக்கலை ஆய்வுகளுக்கு இந்த புத்தகம் ஒரு குறிப்பு நூலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒரு வீட்டுப் புனரமைப்பின் போது, இந்தப் புத்தகம் மற்றும் குடும்பத்தின் பழைய ஆவணங்கள் அடங்கிய ஒரு தேநீர் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதுடன், அது மேலதிக ஆய்வுக்காக ரோஸ் சிம்மன்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. சமீபத்தில் அவர் இந்தப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தபோது, இரண்டாவது பக்கத்தில் "கியாமா நூலகம்" என்ற உத்தியோகபூர்வ முத்திரை இருப்பதைக் கண்டார். அப்போதைய நூலக விதிகளின்படி, ஒருவருக்கு ஒரு புத்தகம் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டதுடன், மது அருந்தி வருபவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவது தடைசெய்யப்பட்டிருந்தது. மேலும், குறிப்பிட்ட தேதிக்குள் புத்தகத்தை திருப்பித் தராவிட்டால், ஒரு வாரத்திற்கு மூன்று பென்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போதைய பணவீக்கம் மற்றும் காலத்தைக் கணக்கிட்டு, நூலக ஊழியர்கள் அந்த அபராதத் தொகை ஆஸ்திரேலிய டாலர் 28,000 (சுமார் அமெரிக்க டாலர் 20,000) என்று குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், சிம்மன்ஸ் குடும்பத்திற்கு அந்த அபராதத் தொகையை வசூலிப்பதில் இருந்து நூலகம் விலக்கு அளித்துள்ளது. துணி அட்டையுடன் கூடிய இந்த புத்தகம் சிறிதளவு நீரினால் சேதமடைந்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக அது இன்னும் மிக நல்ல நிலையில் உள்ளது.
1872 இல் 200 பவுண்டுகள் அரசாங்க மானியத்துடன் தொடங்கப்பட்ட கியாமா நூலகத்தின் முதல் 1,000 புத்தகங்களில், 1858 இல் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்திற்கு 506 வது எண் வழங்கப்பட்டுள்ளது. இது கிரேக்கத்தின் பண்டைய நினைவுச்சின்னங்களின் துல்லியமான அளவீடுகளுடன் கூடிய பெரிய விளக்கப்படங்களைக் கொண்டுள்ளது. இந்த அரிய புத்தகத்தை மீண்டும் ஒருபோதும் வெளியே வழங்காத ஒரு சிறப்புத் தொகுப்பில் சேர்க்க நூலக மேலாளர் மிஷெல் ஹட்சன் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.