அரசாங்கத்தால் பயன்படுத்தப்படாத 247 ஹெக்டேர் நிலங்கள் முதலீட்டாளர்களுக்கு

247-hectares-of-non-government-land-for-investors

அரசாங்கத்திற்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளைத் தெரிவுசெய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. வெளிநாட்டு வேலைகளில் ஈடுபட்டு இந்நாட்டிற்கு வெளிநாட்டு நாணயத்தை அனுப்பிய அல்லது தற்போது அனுப்பிவரும் இளம் தொழில்முனைவோருக்கு பெருந்தோட்டத் துறையில் முதலீடு செய்ய வாய்ப்பளிக்கும் வகையில் பொருத்தமான திட்டமொன்றைத் தயாரிப்பதற்காக 2026-01-12 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதலில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.




அதற்கமைய, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறிமுறையைத் தயாரித்துள்ளது. இந்த பொறிமுறைக்கு அமைய, இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 117 ஹெக்டேர், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான 88 ஹெக்டேர் மற்றும் அல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி லிமிடெட்டிற்குச் சொந்தமான 42 ஹெக்டேர் என அடையாளம் காணப்பட்ட மொத்தமாக 247 ஹெக்டேர் பயன்படுத்தப்படாத காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தெரிவுசெய்யப்படும் தகுதியான முதலீட்டாளர்களுக்கு சம்பந்தப்பட்ட காணிப் பகுதிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவது தொடர்பான பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு முதலீட்டாளரின் அதிகபட்ச வயது 50 ஆகக் கருதப்படுவதுடன், பெருந்தோட்ட மற்றும் விவசாய நடவடிக்கைகள், பெருந்தோட்டச் சுற்றுலா மேம்பாடு, கால்நடை அபிவிருத்தி, நீர்மின்சாரம் மற்றும் சூரிய சக்தி உற்பத்தி, தொழிற்சாலை சார்ந்த உற்பத்திப் பொருட்கள், நன்னீர் மீன்வளம் மற்றும் பிற பெருந்தோட்டச் சார்ந்த பொருளாதார புத்தாக்கத் துறைகளுக்கான முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.




முறையான கொள்முதல் செயல்முறை மூலம் தெரிவுசெய்யப்படும் ஒரு முதலீட்டாளருக்கு வழங்கப்படும் பயன்படுத்தப்படாத காணியின் அளவு அதிகபட்சமாக 1 முதல் 4 ஹெக்டேர் வரை இருக்கும். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் 3 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வெளிநாட்டு வேலைகளில் ஈடுபட்டவர்களுக்கும், தற்போது 3 வருடங்களுக்கும் மேலாக வெளிநாட்டு தொழிலாளியாகப் பணிபுரியும் நபர்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும்.

Post a Comment

Previous Post Next Post