பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கோரலகமகே மந்தினு பத்மசிறி பெரேரா எனப்படும் 'கெஹெல்பெத்தரை பத்மே' என்ற சந்தேகநபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
சர்வதேச செம்மஞ்சள் பிடியாணைக்கு அமைய இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு 2025 ஆகஸ்ட் 31ஆம் திகதி நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இவர், விசாரணை அதிகாரிகளின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்பப் பிரிவு சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து நீக்கப்பட்ட தரவுகளை மீண்டும் பெற முடிந்ததுடன், விசாரணைகளுக்கு முக்கியமான பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, பதிவு செய்யப்பட்ட அழைப்புகள் 1,101 உட்பட 8,441 தொலைபேசி அழைப்புகள், சுமார் மூன்று லட்சம் புகைப்படங்கள் மற்றும் 5,031 காணொளிக் காட்சிகள் அந்தத் தொலைபேசியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், 13 சிறைச்சாலை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மற்றும் 7 மாடல் கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் புகைப்படங்களும் இந்தத் தரவுகளில் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த நாட்டின் சக்திவாய்ந்த 20 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் செம்மஞ்சள் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 19 குற்றவாளிகளுடன் பேணப்பட்ட தொடர்புகளும் இந்தத் தொலைபேசித் தரவுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்காக தனித்தனியாக 20 கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன, இது குறித்து பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சந்தேகநபருக்குச் சொந்தமான 17 வங்கிக் கணக்குகள், தீவு முழுவதும் உள்ள ATM இயந்திரங்களில் பணம் வைப்புச் செய்யப்பட்ட ரசீதுகள், இந்தோனேசியாவில் அவர் தங்கியிருந்த இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 13 ஆவணங்கள் மற்றும் சட்டப்பூர்வமாக வெளிநாடு சென்று போலியான விசாக்களைப் பயன்படுத்தி 13 நாடுகளில் 15 முறை பயணம் செய்த தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அங்கு சந்தேகநபர் கெஹெல்பெத்தரை பத்மேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமளித்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பின்வருமாறு குறிப்பிட்டனர்: "ஐயா... சர்வதேச பொலிஸாரால் வெளியிடப்பட்ட செம்மஞ்சள் அறிவித்தலுக்கு அமைய இந்தச் சந்தேகநபர் இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். அதன் பின்னர், 2025 செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் இவர் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டார். அவர் தடுத்து வைக்கப்பட்டது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பல சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டது. இந்தச் சந்தேகநபரின் பொறுப்பில் இருந்து 08 கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றின் தரவுகள் அழிக்கப்பட்டிருந்தன. பின்னர் அந்தத் தரவுகள் மீட்கப்பட்டன. அந்தக் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து 8841 தொலைபேசி அழைப்புகள் பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. 326671 புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டன. 1101 தொலைபேசிப் பதிவுகள் கண்டெடுக்கப்பட்டன. 5039 காணொளிக் காட்சிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன."
"ஐயா... அந்தக் கையடக்கத் தொலைபேசித் தரவுகளை ஆய்வு செய்தபோது, சக்திவாய்ந்த 20 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. இது குறித்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது. அவரது தொலைபேசிகளில் இருந்து 13 சிறைச்சாலை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிவிக்கப்பட்டது. 07 நடிகைகள் மற்றும் மாடல் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. 09 அரசியல்வாதிகள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன" என்று குறிப்பிட்டனர்.
மேலும் விளக்கமளித்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், "இந்தச் சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புகைப்படங்களில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்களின் 19 கடவுச்சீட்டுகளின் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், 17 வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சந்தேகநபர் 2021 மே மாதம் 21ஆம் திகதி முதல் சட்டப்பூர்வ கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு சென்றுள்ளார். இவர் துபாய், ஜப்பான், இந்தோனேசியா, ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, லாவோஸ் உட்பட 13 நாடுகளுக்கு சுமார் 15 தடவைகள் சென்றுள்ளார். அண்மையில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாகவும் இந்தச் சந்தேகநபர் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது"
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் 18வது சந்தேகநபராகவும் இவர் பெயரிடப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது. சம்பந்தப்பட்ட வழக்கு எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளதால், அன்றைய தினம் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடுமாறும், அவர் இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என்பதால் பலத்த பாதுகாப்புடன் கூடிய சிறைச்சாலைக்கு அனுப்புமாறும் கொழும்பு குற்றப் பிரிவு கோரியது. அத்துடன், சந்தேகநபரை ஒரு பொது மருத்துவ நிபுணரிடம் அனுப்புமாறு சட்ட வைத்திய அதிகாரி எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டது.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சமிந்த அத்துகோரல, தனது கட்சிக்காரரை வெலிசறை சிறைச்சாலைக்கு அனுப்பாமல் வேறு எந்த சிறைச்சாலைக்கும் அனுப்புமாறும், அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும் நீதிமன்றத்தில் கோரினார். சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட நீதவான், சந்தேகநபரை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், சந்தேகநபரின் பாதுகாப்புக்கான முழுப் பொறுப்பும் சிறைச்சாலை அத்தியட்சகரைச் சாரும் என்றும் அறிவித்தார். அத்துடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்களின் சுருக்க அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடப்பட்டது.