மொபைல் எண் பெயர்வுத்திறன் (MNP) வசதி எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்படாது என அரசாங்கம் விசேட விளக்கமளித்துள்ளது. டிஜிட்டல் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வெளியான ஊடக அறிக்கைகளை திருத்தி அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL), சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் மொபைல் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கிடையில் தற்போது நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து இந்த சேவையை நடைமுறைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக மட்டுமே பிரதி அமைச்சர் அங்கு தெரிவித்ததாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது.
இந்தத் துறையின் பங்குதாரர்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் இறுதி உடன்பாட்டிற்கு வரத் தவறினால், இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் சம்பந்தப்பட்ட உரிம நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒழுங்குபடுத்தல் உத்தரவை வெளியிட தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டதாக சம்பந்தப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் மாத இறுதி என்பது சேவை வழங்கும் நிறுவனங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கு வழங்கப்பட்ட இறுதித் தேதியே தவிர, MNP சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் திகதி அல்ல என்று அரசாங்கம் வலியுறுத்துகிறது.
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாத்து, இந்த வசதியை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சேவை ஆரம்பிக்கப்படும் உத்தியோகபூர்வ திகதி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அரசாங்கம் மேலும் குறிப்பிடுகிறது.