சூலாவின் மரணத்தின் மர்மம்

the-mystery-of-chulas-death

இலங்கையின் பிரபல ஆடை வடிவமைப்பாளர், ஆலோசகர் மற்றும் நடிகையுமான சூலா பத்மேந்திர குமாரபதிரண, தனது 46வது வயதில் திடீரென காலமானார். நேற்று இரவு நடைபெற்ற அழகிப் போட்டிக்குப் பிறகு ஏற்பட்ட இந்த மரணம் குறித்து முழுமையான விசாரணையும், பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. அவரது திடீர் மரணத்திற்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.




பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வுக்குப் பிறகு, அவர் அதிகாலையில் பிலியந்தலை, வேவல, கங்காராம வீதியில் அமைந்துள்ள ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர், அந்த வீட்டில் படுக்கையில் குப்புறப் படுத்திருந்த அவரை எழுப்ப அந்த தொழிலதிபர் முயற்சித்துள்ளார். எந்தப் பதிலும் இல்லாததால், பரிசோதித்தபோது தலையணையில் இரத்தம் படிந்திருப்பதைக் கண்டார். பின்னர் 1990 சுவசாரிய ஆம்புலன்ஸ் சேவை அழைக்கப்பட்டு பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டதுடன், இது குறித்து பிலியந்தலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டின் ஆடை வடிவமைத்தல் துறையில் ஒரு முன்னணிப் பெயராகத் திகழ்ந்த சூலா பத்மேந்திரா, காலமாவதற்கு முந்தைய நாள் இரவு கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜ்-இல் நடைபெற்ற 'Universal Woman Sri Lanka 2026' போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கேற்றிருந்தார். அவர் அந்தப் போட்டியின் தேசிய இயக்குநராகவும், தலைமைப் பயிற்சி ஆலோசகராகவும் பணியாற்றினார். 'Chulpadmendra Catwalk Studio' மூலம் பல புதியவர்களை இத்துறைக்கு அறிமுகப்படுத்திய அவர், முன்னாள் உலக அழகி கரோலின் ஜூரியின் தனிப்பட்ட பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.




சர்வதேச அளவில் தனது பெயரைப் பதித்த அவர், 2006 ஆம் ஆண்டு தான்சானியாவில் நடைபெற்ற 'Miss Tourism Model of the World' போட்டியில் ஊடக விருதைப் பெற்றார். மாடலிங் மற்றும் ஆலோசனைக்கு அப்பால் நடிப்பிலும் ஈடுபட்ட அவர், 'Sweet Angel' (2011), 'கின்தரி 2' (அசனி வெசி) மற்றும் 'ஸ்வர' (2023) உள்ளிட்ட திரைப்படங்களிலும், பல பிரபலமான தொலைக்காட்சி நாடகங்களிலும் தனது நடிப்புப் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு தனது குடும்பத்திற்கும் குழந்தைக்கும் முன்னுரிமை அளித்து குறுகிய காலம் துறையிலிருந்து விலகி மீண்டும் வந்த அவர், அநீதிக்கு எதிராகவும், தான் நம்பிய கருத்துக்காகவும் நேரடியாகப் போராடிய ஒரு ஆளுமை கொண்டவர். 2021 ஆம் ஆண்டு நெலும் பொக்குண அரங்கில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் புஷ்பிகா டி சில்வா அவர்களின் கிரீடம் பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கரோலின் ஜூரியுடன் சேர்ந்து இவருக்கு எதிராகவும் ஒரு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அதற்கான தீர்ப்பு எதிர்வரும் அக்டோபர் 17 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவானால் அறிவிக்கப்படவுள்ளது.

Post a Comment

Previous Post Next Post