அனுராதபுரம் - பாதெனிய ஏ-28 பிரதான வீதியில் ஆழங்குளம் பிரதேசத்தில் நேற்று (5) காலை மோட்டார் சைக்கிள் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் எப்பாவலவில் உள்ள அரச வங்கியொன்றின் முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் இல. 18, இஹலவெவ, கிரலோகம முகவரியில் வசித்து வந்த, தற்போது அனுராதபுரம் விமான நிலைய வீதி, கூடாவெவ பிரதேசத்தில் வசித்து வந்த திசாநாயக்க முதியன்சேலாகே ரோஹான் ஜயந்த பண்டார என்ற 43 வயதுடைய திருமணமாகாத ஒருவராவார். அவர் உயிரிழக்கும் போது எப்பாவல அரச வங்கியொன்றின் முகாமையாளராக கடமையாற்றி வந்தார்.
உயிரிழந்தவர் அனுராதபுரத்திலிருந்து எப்பாவல நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, காலை 7.10 மணியளவில் ஏ-28 வீதியின் 79 - 80 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இரண்டு தூண்களுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் ஆலியாகலவிலிருந்து அனுராதபுரம் நோக்கி வந்த தனியார் பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்வதற்காக வீதியின் வலதுபுறம் மோட்டார் சைக்கிளை எடுத்த போது, எதிரே வந்த பஸ்ஸில் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த வங்கி முகாமையாளர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் 11வது விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியான எப்பாவல எலிய திவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததுடன், சந்தேகநபர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தாரா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருந்தார். அந்த பரிசோதனைக்குப் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார் என போக்குவரத்துப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.