
முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் ஒருங்கிணைப்புச் செயலாளருடன் இணைந்து தென் கொரியாவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்து பண மோசடி செய்ததாகக் கூறப்படும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கொரிய வேலைவாய்ப்புப் பிரிவில் பணிபுரிந்த பெண் அதிகாரி ஒருவர் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவினரால் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட சந்தேகநபரான அதிகாரி, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மேற்கூறிய ஒருங்கிணைப்புச் செயலாளருடன் இணைந்து காலி பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கொரிய வேலைவாய்ப்புகளுக்கு அனுப்புவதாகக் கூறி, அவர்களுடன் ஒப்பந்தம் செய்து, ஒவ்வொருவரிடமிருந்தும் தலா பத்து இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், உறுதியளிக்கப்பட்டபடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படாததால், இந்த நிதி மோசடியில் சிக்கியவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசேட விசாரணைப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த அதிகாரி, இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினராகவும், முன்னாள் அமைச்சரின் அரசியல் நடவடிக்கைகளுக்கு தீவிரமாக ஆதரவளித்தவராகவும் இருந்துள்ளார் என்பதும், அந்த அரசியல் தொடர்புகள் காரணமாகவே அவருக்கு பணியகத்தில் வேலை கிடைத்ததும் தெரியவந்துள்ளது. வேலை கிடைத்த பிறகு அவர் இந்த மோசடியை நடத்தியுள்ளார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோசடியில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என விசாரணைப் பிரிவினர் சந்தேகிப்பதால், அத்தகைய மோசடிகளுக்கு ஆளானவர்கள் இருந்தால் உடனடியாக பணியகத்திற்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான அதிகாரி இன்று (27) காலி உடுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் எந்தவித பாகுபாடும் இன்றி சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என வலியுறுத்திய இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க, இஸ்ரேல், ஜப்பான் அல்லது தென் கொரியா போன்ற நாடுகளில் வேலைவாய்ப்புகளுக்கு வெளித்தரப்பினர் எவரும் தலையிட முடியாது என்றும், அவ்வாறு வேலைவாய்ப்புகளை வழங்க முடியும் எனக் கூறி பணம் கேட்கும் மோசடிக்காரர்களிடம் சிக்க வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டார்.
Tags:
News