கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரக்கோட்டுவ, சேதவத்த வீதிப் பிரதேசத்தில் வசித்து வந்த ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காகத் தேவைப்படும் இரு சந்தேகநபர்களைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை எதிர்பார்க்கின்றனர்.
குறித்த நபர் கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது தாயாரால் கிராண்ட்பாஸ் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தற்போது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், காணாமல் போன நபர் 2025.10.11 அன்று மேலும் இருவருடன் சேர்ந்து விருந்துபசாரம் ஒன்றில் கலந்துகொண்டதாகவும், அந்த விருந்தின் பின்னர் அவர் இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அந்த விருந்தில் கலந்துகொண்ட மற்ற இரு நபர்களும் அன்றிலிருந்து தமது வசிப்பிடங்களில் இல்லை என்றும், அவர்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை பதிவாகவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன நபர் தொடர்பான தகவல்களை வெளிக்கொணர்வதற்காகக் கைது செய்யப்பட வேண்டிய இந்த இரு சந்தேகநபர்களும் ரத்னவீர பட்டபெந்திஹே பிரியந்த குமார மற்றும் இலக்கம் 63/ஏ, தெற்கு மிரிசன் கோட்டுவ, லூணுவில முகவரியில் வசிக்கும் வர்ணகுலசூரிய மாலன் இந்திரஜித் பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 071-8591575 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அல்லது 011-2421414 என்ற இலக்கத்தின் ஊடாக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.