சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண்களுக்கு நிர்வாணத்தைக் காட்டிய இளைஞர்கள் பற்றிய பல செய்திகள் பதிவாகின. அவற்றில் ஒன்று, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பெண்களுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளைக் காட்டி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமாகும்.
இது தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்ட முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரதிவாதி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்,
பிலஸ்ஸ நீதவான் டப்ள்யூ.எஸ்.எல். தசநாயக்க அம்மையார், அவருக்கு ஆறு மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மூன்று இலட்சம் ரூபாய் இழப்பீடும் செலுத்துமாறு உத்தரவிட்டார். நீதவானால் விதிக்கப்பட்ட இந்த ஆறு மாத சிறைத் தண்டனை பத்து வருட காலத்திற்கு ஒத்திவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சம்பவத்தை எதிர்கொண்ட இரண்டு வெளிநாட்டுப் பெண்களும் குருநாகலிலிருந்து கண்டிக்குச் செல்வதற்காக பிரதிவாதியின் முச்சக்கரவண்டியைப் பயன்படுத்தியுள்ளனர். பயணத்தின் போது வழி குறித்து விசாரித்தபோது, ஓட்டுநர் அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார். அப்போது அவர் தனது நிர்வாணத்தைக் காட்டி பெண்களுக்குத் தொல்லை கொடுத்ததாகவும், அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண்கள் அந்தச் செயலை வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் இது தொடர்பாக மாவத்தகம பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்தனர்.
பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் பொலிஸில் சரணடைந்தார். மாவத்தகம, பரந்தன வீதியைச் சேர்ந்த 33 வயதுடைய முத்துதந்திரிலாகே சானுக நுவன் ஜெயசிங்க என்பவரே இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பிரதிவாதிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக தலா 1500 ரூபாய் வீதம் 3000 ரூபாய் அரசாங்க அபராதமாகச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டதுடன், ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 3 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தவும் பிரதிவாதி கடமைப்பட்டுள்ளார்.
Tags:
News