அத்தனகலு ஓயா வடிநிலப் பகுதிகளை அண்டிய தாழ்நிலப் பிரதேசங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரித்து நீர்ப்பாசனத் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலக்கம் 04 கொண்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு 2025 நவம்பர் மாதம் 28 ஆம் திகதி அதிகாலை 3.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி அதிகாலை 3.00 மணி வரை இது செல்லுபடியாகும் என அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தனகலு ஓயா வடிநிலப் பகுதிகளில் பல இடங்களில் தற்போது பலத்த மழை பெய்து வருவதால், ஆற்று நீர்மட்ட அளவீடுகளை பகுப்பாய்வு செய்யும் போது, அடுத்த 48 மணி நேரத்தில் இந்த வெள்ளப்பெருக்கு நிலை உருவாக அதிக வாய்ப்புள்ளது.
இதன்படி, திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மகர, கம்பஹா, மினுவன்கொட, ஜா-எல, கட்டான மற்றும் வத்தல பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகள் இந்த பெரும் வெள்ள அபாயத்தால் பாதிக்கப்படும்.
இந்த அவசர நிலைமை காரணமாக, சம்பந்தப்பட்ட தாழ்நிலப் பகுதிகள் வழியாகச் செல்லும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் இது குறித்து மிகுந்த கவனம் செலுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரியுள்ளது. மேலும், உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
News