அம்பாறை - இங்கினியாகல வீதியில் கார் கால்வாயில் வீழ்ந்து விபத்து: பிக்குவும், இராணுவ வீரரும் பலி

a-monk-and-a-soldier-died-when-a-car-fell-into-a-canal-on-the-ampara-iginiyagala-road

 அம்பாறை - இங்கினியாகல பிரதான வீதியில் பொல்வத்த சந்திக்கருகில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி சேனாநாயக்க சமுத்திரத்தின் பிரதான இடது கரை கால்வாயில் வீழ்ந்ததில் ஏற்பட்ட கோர விபத்தில் ஒரு பிக்குவும் ஒரு நபரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (28) இரவு 7.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், கார் கால்வாயில் வீழ்ந்தவுடன் சம்பவ இடத்திற்கு திரண்ட பிரதேசவாசிகள் பெரும் பிரயத்தனத்தின் பின்னர் காருக்குள் சிக்கியிருந்தவர்களை வெளியேற்றி இங்கினியாகல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.




விபத்து இடம்பெற்ற வேளையில் குறித்த காரில் இரண்டு பிக்குமார்களும் இரண்டு பொதுமக்களும் பயணித்துள்ளனர். இந்த இரண்டு பொதுமக்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இலங்கை இராணுவத்தின் திருகோணமலை முகாமில் கடமையாற்றும் மூத்த சகோதரர் காரை ஓட்டி வந்துள்ளார். அவரது கட்டுப்பாட்டை இழந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் அம்பாறை வாவின்ன விகாரையில் வசித்து வந்த வணக்கத்திற்குரிய வாவின்ன சுனந்த தேரரும், காரை ஓட்டி வந்த இராணுவ வீரரான சந்திம லக்மால் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.  மூத்த சகோதரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற வேளையில் வாவின்ன விகாரைக்குச் சென்று கொண்டிருந்த வாகனத்தில் உயிர் தப்பிய சகோதரர் முதலில் இங்கினியாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இராணுவ வீரர் மற்றும் பிக்குவின் சடலங்கள் தொடர்பில் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளதுடன், இங்கினியாகல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

Previous Post Next Post