களு கங்கை வடிநிலப் பகுதியில் தற்போது பெய்து வரும் பலத்த மழை மற்றும் நீர்மட்ட அளவீட்டுத் தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு சிவப்பு நிற வெள்ள எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று (28) காலை 7.30 மணிக்கு இலக்கம் 02 இன் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த சில மணிநேரங்களுக்குள் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த எச்சரிக்கை 2025 நவம்பர் மாதம் 30 ஆம் திகதி காலை 7.30 மணி வரை அமுலில் இருக்கும்.இந்த பெரும் வெள்ள அபாயம் இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய இரு மாவட்டங்களிலும் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளை நேரடியாகப் பாதிக்கும். நீர்ப்பாசன திணைக்களத்தின் தரவுகளின்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிற்ற, அயகம மற்றும் எலபாத ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை, இங்கிரிய, ஹொரணை, தொடன்ங்கொட, மில்லனிய, புலத்சிங்கள, பாலிந்தநுவர, மதுராவல மற்றும் அகலவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களு கங்கை வெள்ளச் சமவெளியில் உள்ள தாழ்நிலப் பகுதிகளிலும் இந்த வெள்ள நிலைமை அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனப் பணிப்பாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இந்த அவசர அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும், வெள்ள அபாயம் உள்ள பகுதிகள் வழியாக பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளும் இது குறித்து மிகுந்த கவனம் செலுத்துமாறும் நீர்ப்பாசன திணைக்களம் கோரியுள்ளது. மேலும், இந்த நிலைமை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிவிப்பு கீழே

Tags:
Trending