உயர்தரப் பரீட்சைகள் உட்பட அனைத்துப் பரீட்சைகளும், விடுமுறைக்குப் பின்னரான பாடசாலைகள் ஆரம்பமும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு!

all-examinations-including-al-and-the-resumption-of-schools-after-the-holidays-have-been-postponed-indefinitely

 நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, க.பொ.த உயர்தரப் பரீட்சை உட்பட நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளையும் காலவரையறையின்றி ஒத்திவைக்கவும், பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதையும் ஒத்திவைக்கவும் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.



தற்போது நிலவும் அனர்த்த நிலைமைக்கு மத்தியில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதற்காக இன்று (28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திருமதி இந்திகா லியனகே, அடுத்த சில நாட்களில் நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளும் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதன்படி, டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான டிசம்பர் 06 ஆம் திகதி நடைபெறவிருந்த பொது தகவல் தொழில்நுட்பப் பரீட்சையும் (GIT) காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.




மேலும், நவம்பர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆட்சேர்ப்புப் பரீட்சைகள் மற்றும் வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகளும் நடைபெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இங்கு வலியுறுத்தினார்.

தீவின் பல பரீட்சை நிலையங்களை அண்மித்த பாடசாலைகளும் வீதிகளும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக தடைபட்டுள்ளதால், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக களுவெவ, பிரதான ஒருங்கிணைப்பு மையங்களில் உள்ள உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் இதுவரை சேகரிக்கப்பட்ட விடைத்தாள்களின் பாதுகாப்பு குறித்து எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்றும், அவை மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.




மேலும், 14 மாவட்டங்களில் உள்ள 15 மையங்களில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்த உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டுப் பணிகளும் சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதிகள் குறித்து உறுதியாக அறிவிக்கும் சூழல் இதுவரை உருவாகவில்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

எவ்வாறாயினும், மக்களின் இயல்பு வாழ்க்கை சீரடைந்தவுடன் இந்த பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கான திருத்தப்பட்ட கால அட்டவணைகள் மற்றும் திகதிகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் பரீட்சார்த்திகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் இங்கு மேலும் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post