வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்காக நடத்தப்படவிருந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றிற்காக, அங்கீகரிக்கப்பட்ட டெண்டர் நடைமுறையிலிருந்து விலகி ஒரு நிறுவனத்தைத் தெரிவு செய்ய அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில், அந்தப் பணியகத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ஹில்மி டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம நேற்று (25) இந்த உத்தரவை பிறப்பித்தார்.சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக மொஹமட் ஹில்மி இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், அங்கு பெறப்பட்ட வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2024 ஜனவரி மாதம் பணியக அதிகாரிகளுக்கு வெளிக்கள நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி வழங்குவதற்காக ஒரு நிறுவனத்தைத் தெரிவு செய்யப்படவிருந்த நிலையில், அதற்கு முறையான கொள்முதல் பிரிவு இருந்தபோதிலும், மனித வளப் பிரிவு ஊடாகச் செயற்பட்டு 'ஜே.எஸ்.எப். ஹோல்டிங்' (JSF Holding) என்ற நிறுவனத்தைத் தெரிவு செய்யுமாறு சந்தேகநபர் பிரதிப் பொது முகாமையாளருக்கு அழுத்தம் கொடுத்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
டெண்டருக்கான ஏலங்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் முடிவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏலங்களை சமர்ப்பித்ததால், ஏலங்களை ஏற்றுக்கொள்ளும் குழு அதை நிராகரித்த போதிலும், அந்த ஏலத்தை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சந்தேகநபர் குழு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது. இந்தச் சம்பவம் மூலம் சந்தேகநபர் தனிப்பட்ட முறையில் இலஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் வெளிவரவில்லை என்பதால், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்ய உடந்தையாக இருந்தமைக்கான குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதால், சந்தேகநபரை பிணையில் விடுவிப்பது விசாரணைகளுக்குத் தடையாக அமையலாம் எனக் கூறி இலஞ்ச ஆணைக்குழு பிணை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நலிந்த இந்ததிஸ்ஸ, தனது கட்சிக்காரர் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், இதன் மூலம் அவருக்கு எந்தவித நிதி இலாபமும் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், சந்தேகநபர் 2019 ஆம் ஆண்டு முதல் நோயுற்ற நிலையில் இருப்பதால், எந்தவொரு நிபந்தனையிலும் பிணை வழங்குமாறு கோரினார்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த பிரதான நீதவான், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு சட்டத்தில் எதிர்பார்க்கப்படும் 'விசேட காரணங்கள்' பிரதிவாதி தரப்பால் போதுமான அளவு முன்வைக்கப்படவில்லை எனத் தீர்மானித்தார். அதன்படி, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து டிசம்பர் 09 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு இலஞ்ச ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.
Tags:
News