ஹோமாகம தலைமையகப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (23) மாலை மாக்கும்புர பிரதேசத்தில் 18 வயது இளைஞன் ஒருவரைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
தியத்தலாவ, கொஸ்லந்த பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன், கொழும்பிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை நேர்காணலுக்காக நேற்று முன்தினம் (23) வந்திருந்தார். இதற்காக அவர் 22ஆம் திகதி இரவு அதிவேக நெடுஞ்சாலை வழியாக கொட்டாவ மாக்கும்புர பல்துறை போக்குவரத்து மையத்தை அடைந்துள்ளார்.
பின்னர், மாக்கும்புரவிலிருந்து நுகேகொடவில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் செல்வதற்காக இளைஞன் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறியுள்ளார். பயணத்தின் போது, முச்சக்கர வண்டி ஓட்டுநரின் நண்பர் என்று கூறப்படும் ஒருவர் வண்டியில் ஏறியுள்ளார், மேலும் சிறிது தூரம் சென்ற பிறகு, நண்பர்கள் என்று கூறி மேலும் இருவர் வண்டியில் ஏறியுள்ளனர். பின்னர், அந்த கும்பல் 18 வயது இளைஞனைக் கடத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, இளைஞன் ஒரு பொலிஸ் வீதித் தடையைக் கண்டு சத்தமாக அலறியுள்ளார். அப்போது செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இளைஞனை மீட்க நடவடிக்கை எடுத்த போதிலும், கடத்தலுடன் தொடர்புடையவர்கள் அந்த சந்தர்ப்பத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக ஹோமாகம தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அதன் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் லலித் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு நாளுக்குள் அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்ய முடிந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாலபே, சந்திரிகா குமாரதுங்க மாவத்தை மற்றும் கிருளப்பனை, பொல்கேங்கொட பிரதேசங்களில் வசிக்கும் 46 முதல் 50 வயதுக்குட்பட்ட நான்கு பேர் ஆவர். அவர்கள் போதைப்பொருள் பாவனையில் கடுமையாக அடிமையாகியுள்ளவர்கள் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர்கள் நீண்டகாலமாக இவ்வாறு ஆட்களைக் கடத்தி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக சம்பவம் தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் (24) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.