இரண்டு வருடங்கள் போன்ற குறுகிய காலப்பகுதியில் சட்டபூர்வமாகச் சம்பாதித்த விதத்தை வெளிப்படுத்தத் தவறிய, ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை (ரூ. 57,347,956.98) வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று (2) உத்தரவிட்டார்.
சந்தேகநபர் ஆரம்பத்திலேயே தனது சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வெளியிடாதவர் என்றும், இத்தருணத்தில் அவர் விடுவிக்கப்பட்டால் எதிர்கால விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டிய நீதவான், அதனாலேயே பிரதிவாதியின் பிணை விண்ணப்பத்தை நிராகரிப்பதாக அறிவித்தார். குறிப்பாக, முறையற்ற சொத்துக்கள் குறித்து வழக்குத் தொடர காரணங்கள் இருந்தால் சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு அறிவிக்கும் வரை சந்தேகநபர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் நீதிமன்றத்தில் மேலும் வலியுறுத்தப்பட்டது.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிடைக்கப்பெற்ற அநாமதேய மனுவின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2011 மார்ச் 31 முதல் 2013 மார்ச் 31 வரையான காலப்பகுதியில் சந்தேகநபரால் குறித்த பணம் சட்டவிரோதமான முறையில் சம்பாதிக்கப்பட்டுள்ளது என இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது. ராகல பிரதேசத்தில் கோடிக்கணக்கான பெறுமதியான காணியை கொள்வனவு செய்தமை,
'என்.பி.ஆர். சன்' (NBR Sun) என்ற பெயரில் கூட்டு வர்த்தகத்தை நடத்திச் சென்றமை, வரி விலக்கு வாகன அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொண்டமை அத்துடன் நண்பர்களின் துபாய் பயணங்களுக்காகப் பணம் செலவழித்தமை மற்றும் உயிரிழந்த சகோதரர் ஒருவரிடமிருந்து ஒரு கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட பல விடயங்கள் 2023 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஆணைக்குழுவுக்கு வந்தபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டபோது மேலும் பல சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால், அது குறித்து சந்தேகநபரின் உறவினர்களிடமும் விசாரிக்கப்படவுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி திஷ்ய வேரகொட, பத்து ஆண்டுகளுக்கும் மேலான ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தனது கட்சிக்காரரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஆணைக்குழு விடுக்கும் கோரிக்கை நியாயமற்றது மற்றும் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்று வாதிட்டார். மேலும், வங்கிக் கணக்கு ஆவணங்கள் கூட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்படாத நிலையில், இத்தகைய பழைய பரிவர்த்தனைகள் குறித்து விளக்கமளிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும், வாலப்பனை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கச் செல்ல வேண்டியிருப்பதால் சந்தேகநபருக்குப் பிணை வழங்குமாறும் சட்டத்தரணி கோரினார்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த பிரதான நீதவான், இலஞ்ச ஆணைக்குழுவால் அழைக்கப்படும் வரை சந்தேகநபர் தனது சொத்துக்களை வெளிப்படுத்த தானாக முன்வரவில்லை என்று சுட்டிக்காட்டினார். அதன்படி, சந்தேகநபருக்குப் பிணை வழங்குவது எதிர்கால விசாரணைகளுக்கும் சாட்சியங்களுக்கும் இடையூறு விளைவிக்கும் என்று நீதிமன்றம் முடிவு செய்து, பிணை விண்ணப்பத்தை நிராகரித்து, அவரை விளக்கமறியலில் வைக்கவும், விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் இலஞ்ச ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டது.