அனுராதபுரம் மல்வத்து ஓயாவில் தனது இரண்டு குழந்தைகளுடன் குதித்த ஒரு பெண் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு குழந்தைகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மொரட்டுவ, அங்குலான பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய இப் பெண் நேற்று (02) அனுராதபுரம் பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள பாலத்திற்கு அருகில் குழந்தைகளுடன்
இவ்வாறு மல்வத்து ஓயாவில் குதித்துள்ளார். இச் சம்பவத்தில் எட்டு வயது ஆண் குழந்தையும், நான்கரை வயது பெண் குழந்தையும் காணாமல் போயுள்ளனர்.கடன் பெற்று வெளிநாட்டு வேலைக்குச் சென்ற தனது கணவர் தொலைபேசி அழைப்புகளையும் எடுக்காமல் தன்னைத் தவிர்த்து வருவதாகவும், கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதை தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்ததாகவும் உயிர் தப்பிய பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். வேலை தேடிச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, முன்தினம் (01) பகல் கொழும்பு கோட்டையிலிருந்து ரயிலில் ஏறி, இரவு அனுராதபுரம் வந்தடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் முச்சக்கர வண்டியில் குறித்த இடத்திற்கு வந்த அவர், குழந்தைகளை அணைத்துக்கொண்டு ஆற்றில் குதிக்கத் தயாரானபோது, குழந்தைகள் அதற்கு விருப்பம் தெரிவிக்காமல் சத்தமிட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஆற்றில் குதித்த பின்னர் குழந்தைகள் தன்னை விட்டு விலகிச் சென்றதாகவும், தான் ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது மட்டுமே நினைவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மிஹிந்துபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நகரத்திற்குச் செல்லும் வழியில், ஒரு பெண் நீரோட்டத்தின் நடுவில் ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டு கைகளை அசைப்பதைக் கண்டு, உடனடியாக செயல்பட்டு கிராமவாசிகளுடன் இணைந்து கயிறுகளின் உதவியுடன் அவரை வெளியேற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். தற்போது நிலவும் கடும் மழையுடன் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாலும், அப்பகுதியில் முதலைகள் அதிகமாக நடமாடுவதாலும், அனுராதபுரம் பிரிவுக் பொலிஸ் உயிர் பாதுகாப்புப் பிரிவினால் குழந்தைகளைத் தேடி மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சந்தேகநபர் தாயைக் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Tags:
News