மே (22) அன்று இசுருபாய கல்வி அமைச்சின் வளாகத்தில் பாடசாலை மாணவிகளின் சுகாதாரத்தைப் பற்றிய ஒரு முக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அம்மையாரின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்னவும் கலந்துகொண்டார்.
2024 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சினால் தேசிய திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்கள் வழங்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. கிராமப்புற, தோட்டப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவிகளை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம், 2026 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை உள்ளடக்கும் வகையில் 6 ஆம் வகுப்புக்கு மேற்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவிகளை இலக்காகக் கொண்டு செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விரிவாக்கத் திட்டத்திற்காக அரசாங்கம் 1.44 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. சுகாதார துவாய்கள் கொள்வனவு செய்வதற்காக ஒரு மாணவிக்கு ஆண்டுக்கு 1,440 ரூபா பெறுமதியான வவுச்சர்களை வழங்குவதற்கும், அந்த வவுச்சர்களை மாகாண கல்வி அலுவலகங்கள் ஊடாக பாடசாலைகளுக்கு விநியோகிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுகாதார தரநிலைகள் பேணப்படுவதை உறுதி செய்வதற்காக, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் சான்றளிக்கப்பட்ட நிறுவனங்கள் பாடசாலைகளுக்குச் சென்று சுகாதார துவாய்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், பிரதமர் பல விடயங்களில் விசேட கவனம் செலுத்தினார். மாணவிகள் தங்கள் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப சுகாதார துவாய்களை கொள்வனவு செய்ய வாய்ப்பளித்தல், பிரதேசங்களின் புவியியல் வேறுபாடுகளுக்கு ஏற்ப வவுச்சர்கள் மற்றும் சுகாதார துவாய்களை விநியோகிக்கும் முறைகளை உருவாக்குதல், அத்துடன் பயன்படுத்திய பின்னர் சூழலுக்கு இணக்கமான முறையில் சுகாதார துவாய்களை அகற்றும் ஒரு பொறிமுறையை பாடசாலைகளில் நடைமுறைப்படுத்துதல் என்பன அவற்றில் அடங்கும். திட்டத்தின் செயல்திறன் மற்றும் பயனாளிகளின் வசதி குறித்து முக்கிய கவனம் செலுத்தி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உட்பட பல அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.