ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், கொலைகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்டிருந்த மூன்று சந்தேகநபர்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு நேற்று (16) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இவர்களை டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்.
226 இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகாலை 5.20 மணியளவில் அழைத்து வரப்பட்டனர்.இந்த சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமை, நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸாருக்கும் டுபாய் மற்றும் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இராஜதந்திர உறவுகளின் அடிப்படையிலாகும். கடந்த சில நாட்களில் அங்கு கைது செய்யப்பட்டவர்களில் தெற்கின் பாதாள உலக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு முக்கிய நபர் மற்றும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளரை சுட்டுக் கொன்ற சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவரும் அடங்குவர்.
தீவுக்கு அழைத்து வரப்பட்டவர்களில் ரவீன் சமிந்த வீரசிங்க என்ற 'புஞ்சா' என்பவர் 52 வயதுடைய கந்தான பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கந்தான பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் ஒரு கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர். இவர் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.
மற்றொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, எல்பிட்டிய மற்றும் ஊரஸ்மன்கந்த பிரதேசங்களை மையமாகக் கொண்டு பல குற்றங்களை இயக்கியதாகக் கூறப்படும் கிரியல்தெனியகே டொன் ரசிக்க சஞ்சீவ குமார என்ற 'ஊரகஹ சூட்டி மல்லி' ஆவார். 30 வயதுடைய இவர் கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபராவார். மேலதிக விசாரணைகளுக்காக எல்பிட்டிய பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.
வந்தவர்களில் ஒரு பெண், வெளிநாட்டுத் தூதரகத்தில் பணிபுரிந்தபோது அரசாங்கப் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர். நிஷாமணி டி சில்வா என்ற 56 வயதுடைய இந்தப் பெண் ரத்மலான பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. மேலதிக விசாரணைகளுக்காக இவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் இத்தகைய குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக இலங்கை பொலிஸார் இதுவரை 95 சிவப்பு அறிவித்தல்களைப் பெற்றுள்ளனர். 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் மட்டும் 21 சந்தேகநபர்களை இலங்கைக்கு அழைத்து வர பொலிஸார் வெற்றி பெற்றுள்ளனர்.