தற்போது நிலவும் அவசரகால அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வாராந்திர உலர் உணவு கொடுப்பனவை ரூபா 10,500 ஆக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு முன்னர், இந்த கொடுப்பனவு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூபா 1,800 முதல் ரூபா 3,600 வரை இருந்தது. புதிய திருத்தத்துடன், முன்னர் ரூபா 2,100 ஆக இருந்த கொடுப்பனவும் ரூபா 10,500 ஆக கணிசமான அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுப்பதற்குத் தேவையான மேலதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கும், வழிகாட்டல்களை வெளியிடுவதற்கும், அங்கீகாரங்களை வழங்குவதற்கும் திறைசேரி செயலாளருக்கு அதிகாரம் வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்தில் கொண்டு, கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை விரிவான அனர்த்த நிலைமையை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்த நிலைமையின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் அடங்கிய 05/2025 ஆம் இலக்க வரவு செலவு சுற்றறிக்கை மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், தொடர்புடைய கொள்முதல் நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்ள அமைச்சுகள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 06/2025 ஆம் இலக்க சுற்றறிக்கையையும் திறைசேரி செயலாளர் வெளியிட்டுள்ளார்.
அவசரகால அனர்த்த பதிலளிப்பு மற்றும் நிவாரண சேவைகளுக்காக 2025 ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவு மதிப்பீடுகளில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக, மேலும் ரூபா 550 மில்லியன் மேலதிக நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
Tags:
News