நவம்பர் மாத இறுதியில் இலங்கையை பாதித்த மோசமான வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த புத்தளம் ரயில் மார்க்கத்தின் சேவைகள் நாளை, அதாவது 2025 டிசம்பர் 29 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த நாட்களில் பெய்த மழையுடன் குடாவெவ மற்றும் மாதம்பே ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள கடுப்பிட்டிய பிரதேசத்தில் ரயில் பாலத்திற்கு அருகில் பாதை அரிக்கப்பட்டதால் கொழும்பு கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையிலான ரயில் சேவை முற்றாக தடைப்பட்டிருந்தது.
இந்த அவசர அனர்த்த நிலை காரணமாக சிலாபம் ரயில் நிலையத்தில் சுமார் 05 ரயில் பெட்டிகள் நிறுத்தப்பட வேண்டியிருந்ததுடன், ரயில் சேவை லுணுவில ரயில் நிலையம் வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.தற்போது சேதமடைந்த ரயில் பாதை பகுதி முழுமையாக பழுதுபார்க்கப்பட்டுவிட்டதால் நாளை முதல் வழமைபோல கொழும்பு கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையில் ரயில் சேவை இடம்பெறும். அதற்கமைய அலுவலகப் பயணிகளின் வசதிக்காக காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படும் ரயில் அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை காலை வேளையில் ஐந்து ரயில்கள் இயக்கப்படும். சிலாபத்திலிருந்து மு.ப. 04.20 இற்கு புறப்படும் ரயில் மு.ப. 07.05 இற்கு கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளது. அத்துடன் மு.ப. 04.50 இற்கு புறப்படும் ரயில் மு.ப. 07.40 இற்கும், மு.ப. 05.30 இற்கு புறப்படும் ரயில் மு.ப. 07.30 இற்கும் கொழும்பு கோட்டையை வந்தடையும். மேலும் மு.ப. 05.50 மற்றும் 06.10 இற்கு சிலாபத்திலிருந்து புறப்படும் ரயில்கள் முறையே மு.ப. 08.20 மற்றும் 09.00 மணியளவில் கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளன.
மாலை வேளையில் கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் வரை ஐந்து ரயில் சேவைகள் இயக்கப்படும். அதற்கமைய பி.ப. 04.30 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் ரயில் பி.ப. 07.15 இற்கு சிலாபத்தை வந்தடையும். பி.ப. 04.45 இற்கு புறப்படும் ரயில் பி.ப. 06.45 இற்கு அதன் சேருமிடத்தை வந்தடையும். பி.ப. 05.18 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் ரயில் பி.ப. 07.45 இற்கு சிலாபத்தை வந்தடையவுள்ளது. அத்துடன் பி.ப. 06.10 இற்கும் மற்றும் இரவு 07.10 இற்கும் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் ரயில்கள் முறையே இரவு 08.44 இற்கும் மற்றும் இரவு 09.50 இற்கும் சிலாபம் ரயில் நிலையத்தை வந்தடையும்.
இந்த புதிய அட்டவணைக்கு மேலதிகமாக கொழும்பு கோட்டைக்கும் நீர்கொழும்புக்கும் இடையில் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படும் அலுவலக ரயில்கள் வழமைபோல இயங்கும் என்பதையும் ரயில்வே திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவிக்கிறது.