தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான தாக்கத்தை நிர்வகித்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் தற்போதைய நிலையை விட சிறந்த நாட்டை குழந்தைகளுக்கு பரிசளிப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார். அவசரகால அனர்த்த நிலைமையின் மத்தியில் திட்டமிட்ட முறையில் செயற்பட்டு வரும் அரசாங்கம்,
இந்த தருணத்தில் முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, நிரந்தர மற்றும் தற்காலிக தீர்வுகளின் மூலம் பிரச்சினைகளை அணுகி வருவதாக அண்மையில் (03) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் குறிப்பிட்டார்.இந்த அனர்த்த நிலைமையால் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு ஓரளவு தாக்கம் ஏற்பட்டிருந்தாலும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் மிகவும் பாரதூரமானது என அவதானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பல கிராம சேவகர் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், சுமார் 35,000 ஏக்கர் நெற்பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அந்த மக்களுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்கவும், வட மாகாண மாவட்ட செயலாளர்களின் கோரிக்கைகளுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நயினாதீவு தீவுவாசிகளின் படகுப் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், பொறியியலாளர்கள் உள்ளிட்ட தரப்பினரின் தன்னார்வ பங்களிப்பும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு கிடைத்து வருகிறது.
அனர்த்த நிவாரண சேவைகளை வினைத்திறனாக்குவதற்காக அரச அதிகாரிகளுக்கு நிதி கையாளும் அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் ஒரு விசேட நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, வரலாற்றில் முதல் முறையாக ஒரு பிரதேச செயலாளருக்கு 500 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், கிராம உத்தியோகத்தர்களுக்கு அவசர தேவைகளுக்காக 50,000 ரூபாய் பணத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கு 25,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதுடன், கட்சி பேதமின்றி தேசிய பொறுப்பாகக் கருதி அனைவரும் இந்த நிவாரண சேவைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட போக்குவரத்து சேவைகளை மீட்டெடுக்கும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், சேதமடைந்த வீதிகளில் 98% வீதி புனரமைப்பு பணிகள் இந்த மாதம் 10 ஆம் திகதிக்குள் நிறைவடையவுள்ளன. ரம்புக்கனைக்கு அப்பால் அதிக எண்ணிக்கையிலான ரயில் என்ஜின்கள் சிக்கியிருந்தாலும், இன்று வரை 150 ரயில் சேவைகள் இயக்கப்பட்டுள்ளன, மேலும் நாளை 4200 இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்துகள் சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாலங்கள் பழுதுபார்க்க சிறிது காலம் எடுக்கும் என்பதால், கண்டி முதல் அம்பேபுஸ்ஸ வரையிலும், அங்கிருந்து பொல்கஹவெல வரையிலும் சிறப்பு பஸ் மற்றும் ரயில் ஒருங்கிணைந்த சேவை மூலம் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags:
Political