சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சவுதி அரேபியாவின் பாலைவன மலைப் பகுதிகள் பனியால் மூடப்பட்டு, அந்தப் பகுதி ஒரு குளிர்ந்த அதிசய உலகமாக மாறிய ஒரு அரிய வானிலை நிகழ்வு பதிவாகியுள்ளது. பொதுவாக கடுமையான வெப்பம் மற்றும் வறண்ட பாலைவன காலநிலை நிலவும் சவுதி அரேபியாவில் இந்த திடீர் மாற்றம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதுடன்,
இது அந்நாட்டின் வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது. தபூக் (Tabuk) பிரதேசத்தின் மலைப்பகுதிகளும் பாலைவன நிலங்களும் இவ்வாறு வெண்மையான பனி அடுக்கால் மூடப்பட்டிருப்பது மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு நிகழ்ந்த ஒரு சிறப்பம்சமாகும்.வட சவுதி அரேபியா வழியாக வீசிய கடுமையான குளிர்ந்த காற்று காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், இதனால் அப்பகுதிக்கு அதிக மழை, பலத்த காற்று மற்றும் பதிவுசெய்யப்பட்ட குறைந்த வெப்பநிலை கிடைத்துள்ளது. குறிப்பாக ஜபல் அல் லவ்ஸ் (Jabal Al Lawz) மற்றும் ட்ரோஜேனா (Trojena) மலைப் பிரதேசங்களில் வெப்பநிலை செல்சியஸ் -4 டிகிரி வரை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பிரதேசங்களில் பெய்த பனி காரணமாக பாலைவனத்தின் கரடுமுரடான பாறைகளும் மணல் திட்டுகளும் பனியால் மூடப்பட்ட ஒரு அற்புதமான காட்சி உருவாகியுள்ளது.
இந்த அரிய காட்சியைக் காண உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் அப்பகுதிகளில் திரண்டுள்ளதைக் காணலாம். பாலைவனத்தில் பனிச்சறுக்கு (Skiing), பனி விளையாட்டுகளில் ஈடுபடுதல் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், இருண்ட மேகங்களுக்கு அடியில் பனியால் மூடப்பட்ட பாலைவனத்தில் ஒட்டகங்கள் சுற்றித் திரியும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. NEOM திட்டத்திற்குச் சொந்தமான ட்ரோஜேனா மலைப்பகுதியும் இவ்வாறு பனியால் மூடப்பட்டிருப்பது சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த பனிப்பொழிவுக்கு இணையாக சவுதி அரேபியாவின் பல பகுதிகளிலும் மோசமான வானிலை நிலவுவதாக வானிலை ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன. மக்கா, மதீனா, ஜசான் மற்றும் அஸீர் போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், ரியாத் உட்பட மேலும் சில பகுதிகளில் மூடுபனி நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. செங்கடல் மற்றும் அரேபிய வளைகுடா பகுதிகளில் கடல் அலைகளின் மட்டம் உயரக்கூடும் என்பதால், கடலோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த திடீர் வானிலை மாற்றம் சவுதி அரேபியாவின் காலநிலை வரலாற்றில் மறக்க முடியாத நினைவாக மாறியுள்ளது.
புகைப்படத் தொகுப்பு இங்கே கிளிக் செய்யவும்

