மகாபலி கங்கை பெருக்கெடுத்து ஓடியதால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பாரிய சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி சுமார் 300 கோடி ரூபாய் எனவும் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார். வெள்ளப்பெருக்கினால் பல்கலைக்கழகத்தின் கணினி அமைப்புகள், மின்னணு உபகரணங்கள், ஆராய்ச்சித் தரவுகளைக் கொண்ட உபகரணங்கள் மற்றும் பல பெறுமதியான தளபாடங்கள் அழிந்துவிட்டதாக உபவேந்தர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, முகாமைத்துவ பீடம், விவசாய பீடம் மற்றும் கால்நடை மருத்துவ பீடம் ஆகிய பிரிவுகள் இந்த அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பீடங்களில் இருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான ஆராய்ச்சி உபகரணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் அழிந்துள்ளன. பல்கலைக்கழக கணினி மையத்திற்கு மட்டும் ஏற்பட்ட சேதம் சுமார் 6 கோடி ரூபாய் என்றும், மேலும் பராமரிப்புப் பிரிவின் மின் உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பல பெரிய பிளாஸ்டிக் நீர் தொட்டிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் உபவேந்தர் குறிப்பிட்டார்.
ஏற்பட்ட மொத்த சேதத்தை மதிப்பிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், இந்த அழிவுக்குப் பிறகு பல்கலைக்கழகத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளதாகவும் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் வலியுறுத்தினார். எவ்வாறாயினும், பல்கலைக்கழக வளாகத்தில் குவிந்துள்ள சேற்றுப் படலங்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரத்திற்குள் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Tags:
News