சர்வதேச நாணய நிதியத்தின் 350 மில்லியன் டொலர் கடன் விரைவில் - அனர்த்தங்களுக்கு தனியான உதவி!

imf-to-disburse-350-million-loan-soon-separate-aid-for-disasters
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட 'தித்வா' சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து இழப்புகளால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராக இருப்பதாக அதன் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசாக் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த அனர்த்தத்தினால் மனிதாபிமான, சமூக மற்றும் பொருளாதார துறைகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை மதிப்பிடுவதற்கு இலங்கை அதிகாரிகளுடனும் அபிவிருத்தி பங்காளர்களுடனும் நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும், அனர்த்த சேத மதிப்பீடு முடிந்த பின்னர் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து தெளிவான புரிதலைப் பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.




இலங்கையின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாகவும், விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் அமுல்படுத்தப்படும் திட்டத்தின் ஆறாவது தவணையாக 350 மில்லியன் அமெரிக்க டொலர் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அங்கு தெரியவந்தது. எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை கூட்டத்தில் இது தொடர்பான இறுதி தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதுடன், சூறாவளிக்கு முன்னர் நடைபெற்ற ஐந்தாவது மீளாய்வு தொடர்பில் ஏற்கனவே ஊழியர் மட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் கொசாக் மேலும் உறுதிப்படுத்தினார்.




இதற்கிடையில், அனர்த்த நிலைமைக்குப் பிந்தைய நிவாரண சேவைகள் மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் நிதி அமைச்சில் நேற்று உயர்மட்ட நன்கொடையாளர்களின் விசேட கூட்டம் நடைபெற்றது. மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரி செயலாளர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இராஜதந்திர தூதுக்குழுக்கள், வெளிநாட்டு கடன் வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பல உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்டனர். அங்கு, திறைசேரி செயலாளர் சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகள் குறித்த ஒரு சுருக்கமான கண்ணோட்டத்தை முன்வைத்து, அவசர மனிதாபிமான உதவி மற்றும் நடுத்தர கால நிதி வசதிகளின் தேவையை வலியுறுத்தினார்.

Post a Comment

Previous Post Next Post