
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துரித நிவாரணம் வழங்குவதற்காக 50 பில்லியன் ரூபா மேலதிக மதிப்பீட்டை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த யோசனையை சபையில் சமர்ப்பித்தார்.
இந்த மேலதிக மதிப்பீடு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அது தொடர்பான விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அவசர அனர்த்த நிலைமையுடன் உருவாகியுள்ள தேசிய அனர்த்தத்திலிருந்து மீள்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன்,
அதற்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தது.
வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க குறிப்பிட்டபடி, அங்கீகரிக்கப்பட்ட 50 பில்லியன் ரூபா இரண்டு பிரிவுகளின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 20 பில்லியன் ரூபா அனர்த்த நிவாரணப் பணிகளுக்கும், 30 பில்லியன் ரூபா அபிவிருத்தி உதவிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையில், வரவுசெலவுத் திட்டக் குழு விவாதத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் ஒரு விசேட கோரிக்கையை முன்வைத்தார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தேசிய துக்க தினத்தை அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கோரினார்.
Tags:
News