ஒரு வயலில் போடப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மின் கம்பியில் சிக்கியிருந்த நாயைக் காப்பாற்றச் சென்ற எட்டு வயது பாடசாலை மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகமான செய்தி மித்தெனிய பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
இவ்விதம் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் மித்தெனிய, ஹெலல பிரதேசத்தைச் சேர்ந்த தீக்ஷண விஷ்வ அநுராத என்ற சிறுவன் ஆவார். மித்தெனிய ஆரம்பப் பாடசாலையில் 4ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த அவர் உயிரிழக்கும் போது 8 வயது 10 மாதங்கள் நிரம்பியவராக இருந்தார்.
கடந்த 02ஆம் திகதி காலை 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீட்டின் பின்புறமுள்ள வயல் பகுதியிலிருந்து தனது வீட்டில் வளர்க்கும் செல்ல நாயின் சத்தம் கேட்ட மாணவன் உடனடியாக அந்த திசை நோக்கி ஓடிச் சென்றுள்ளார். அங்கு அங்கீகரிக்கப்படாத மின் கம்பியில் சிக்கியிருந்த நாயைக் காப்பாற்ற முயன்றபோது சிறுவனுக்கும் மின்சாரம் தாக்கியுள்ளது என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் இருந்த மாணவன் உடனடியாக மித்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கிய நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தது.
சம்பந்தப்பட்ட பாதுகாப்பற்ற மின் கம்பி, மாணவனின் அயலவர் ஒருவரால் வயலில் உள்ள நீர் மோட்டரை இயக்குவதற்காக சட்டவிரோதமாக போடப்பட்டிருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், மாணவனின் சடலம் மித்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Tags:
Trending