'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான C-130J சூப்பர் ஹெர்குலிஸ் (Super Hercules) ரக விமானங்கள் இரண்டும், 36வது அவசரகால மீட்புப் படையின் (CRG) விமானப்படை வீரர்கள் குழுவும் இலங்கைக்கு வந்துள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்த விசேட பிரதிநிதிகள் குழுவையும் விமானங்களையும் வரவேற்பதற்காக இலங்கையின் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அம்மையார் மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கே.பி. அருண ஜெயசேகர ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.குவாமில் (Guam) நிலைநிறுத்தப்பட்டுள்ள 36வது அவசரகால மீட்புப் படையுடன், ஜப்பானின் யோகோட்டா விமானப்படைத் தளத்தின் 374வது விமானப் போக்குவரத்துப் பிரிவு மற்றும் ஜப்பானின் ஒகினாவாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 3வது மரைன் படைப்பிரிவும் இந்த நடவடிக்கைகளுக்கு தீவிர பங்களிப்பை வழங்கும்.
இந்த நிகழ்வில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனீத ருவன் கொடிதுவக்கு மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட ஆகியோரும் கலந்துகொண்டனர். இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை விரைவாக கொண்டு செல்வதற்காக இந்தக் குழுக்கள் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளன.
இலங்கையின் நிவாரணக் குழுக்களின் வீரமிக்க சேவையைப் பாராட்டிய தூதுவர் ஜூலி சங் அம்மையார், போக்குவரத்து மற்றும் விநியோகப் பணிகளின் சுமையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்த ஒத்துழைப்பின் மூலம், இலங்கையின் முன்னணி நிவாரணக் குழுக்களுக்கு போக்குவரத்துப் பணிகளுக்குப் பதிலாக பாதிக்கப்பட்ட மக்கள் மீது அதிக கவனம் செலுத்த வாய்ப்பு கிடைக்கும் என்றும், இந்த சவாலான நேரத்தில் அமெரிக்கா இலங்கையுடன் உறுதியாக நிற்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சாலைகள் தடைபட்டு, நேரம் குறைவாக இருக்கும்போது விநியோகச் சங்கிலி ஒரு உயிர்நாடியாக மாறும் என்று சுட்டிக்காட்டிய அமெரிக்க தூதரகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி மத்தேயு ஹவுஸ், அணுக முடியாத பகுதிகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதில் C-130J விமானத்தின் சிறப்புத் திறனை விளக்கினார். இலங்கை ஆயுதப் படைகளுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட கூட்டுப் பயிற்சி ஒத்திகைகள் மூலம் கட்டியெழுப்பப்பட்ட வலுவான உறவுகள், 'டிட்வா' போன்ற அவசரகால நெருக்கடி சூழ்நிலைகளில் இணைந்து செயல்பட பெரிதும் உதவியுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில், இலங்கை ஆயுதப் படைகளுடன் முழுமையான ஒருங்கிணைப்புடன், அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளை (INDOPACOM) இந்த விமானங்கள் மற்றும் பணியாளர்களை அனுப்பியுள்ளது.
அதன்படி, தற்காலிக தங்குமிடப் பொருட்கள், சுத்தமான நீர், சுகாதார வசதிகள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களை கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லும் நடவடிக்கைகளுக்கு இலங்கை விமானப்படைக்கு உதவுவதற்காக இந்த அமெரிக்க விமானங்கள் பயன்படுத்தப்படும்.
கூடுதலாக, அமெரிக்க டொலர் 2.1 மில்லியன் (சுமார் 640 மில்லியன் ரூபாய்) மதிப்புள்ள எரிபொருள் பவுசர்கள், ஃபோர்க்லிஃப்ட் (forklifts), மின் விளக்குகள், தரை மின்சக்தி அலகுகள் மற்றும் நடமாடும் சரக்கு ஏற்றும் தளங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்களும் அண்மையில் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஒத்துழைப்பின் கீழ் வழங்கப்பட்ட இந்த உபகரணங்கள் தற்போது அனர்த்த பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, இதன் மூலம் விமானப்படைக்கு இரவும் பகலும் திறம்பட நிவாரணம் வழங்கும் திறன் கிடைத்துள்ளது.
சூறாவளி தாக்கிய 72 மணி நேரத்திற்குள் அனர்த்த பதிலளிப்பு முயற்சிகளுக்காக 2 மில்லியன் டொலர் நிதி உதவியை அறிவிக்கவும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. நம்பகமான செயற்பாட்டு நிறுவனங்கள் மூலம் இந்த உதவி அவசரகால தங்குமிடங்கள், நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் என்றும், மீள்குடியேற்ற முயற்சிகளில் இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் செயல்படும் என்றும் தூதரக அறிக்கை குறிப்பிடுகிறது.
Tags:
Trending