கொத்து சாப்பிட்ட பிறகு நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 35 வயது இளைஞர் ஒருவர் முன்தினம் (24) இரவு முதல் நேற்று (25) அதிகாலை வரையிலான காலப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கல்பாத்த, படகொட, நதீஉயன பிரதேசத்தில் வசித்து வந்த கே.டி. மகேஷ் சஞ்சீவ நந்ததேவ (35) என்ற திருமணமாகாத இளைஞர் ஆவார்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த உயிரிழந்த இளைஞர் முன்தினம் இரவு 8.30 மணியளவில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அவர் வரும்போது ஒரு கொத்து கொண்டு வந்ததாகவும், அதை தனது மூத்த சகோதரருடன் சாப்பிட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இரவு 10.30 மணியளவில் அவருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாகவும், உடனடியாக கல்பாத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு முதற்கட்ட சிகிச்சை அளித்த பின்னர் ஹொரண மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், அங்கு நேற்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த இளைஞருடன் கொத்து சாப்பிட்ட அவரது மூத்த சகோதரருக்கு எந்தவித நோய்த்தொற்றும் ஏற்படவில்லை என்பதும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மரணம் தொடர்பில் ஹொரண மாவட்ட பொது மருத்துவமனையில் திடீர் மரண விசாரணை நடத்தப்படவுள்ளதுடன், ஹொரண திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் சமாதான நீதவான் சுமேத குணவர்தனவினால் அது நடத்தப்படும். மரணத்திற்கான காரணம் இந்த விசாரணைக்குப் பின்னரே உறுதியாகத் தெரியவரும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். அங்குருவாதொட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.