களனி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வர்த்தகர் மாயம்

businessman-swept-away-in-kelani-river-goes-missing

 களனி ஆற்றின் கடும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் காணாமல் போன சம்பவம் கடந்த 29ஆம் திகதி பதிவாகியுள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.



இவ்வாறு காணாமல் போனவர் ஹன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சாமர கிரிஷாந்த என்பவராவார். இவர் ஹன்வெல்ல நகரில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்.

நிலவிய மோசமான வானிலை காரணமாக களனி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக ஹன்வெல்ல பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் படகுகளைப் பயன்படுத்தி விசேட நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர். அப்போது, இந்த நபர் தனது வீட்டின் மேல் மாடியில் தங்கியிருந்ததாகவும், பொலிஸ் அதிகாரிகள் அவரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த போதிலும், அவர் அந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியேற மறுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.




பின்னர், ஆற்றின் நீரோட்டம் தீவிரமடைந்தபோது, வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டர் ஒன்று நீரில் அடித்துச் செல்லத் தொடங்கியதாகவும், அதை பிடிக்கச் சென்றபோது அவர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

களனி ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்த மட்டத்தில் இருப்பதாலும், பிரதேசத்தில் நிலவும் வெள்ளப்பெருக்கு நிலைமையாலும் காணாமல் போனவரைக் கண்டுபிடிக்கும் பணிகளுக்கு கடுமையான தடைகள் ஏற்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் ஹன்வெல்ல பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிசிர குமார உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post