
அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உலர் உணவுக்கான கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்புச் செயலாளரால் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டு இலக்கம் 01 சுற்றறிக்கையின்படி இந்தக் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க சுட்டிக்காட்டியுள்ளபடி, முன்னர் ஒரு தனிநபருக்கு வாராந்தம் வழங்கப்பட்ட 1,800 ரூபா 2,100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய முறைமையின் கீழ், இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 4,200 ரூபாவும், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 6,300 ரூபாவும், நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 8,400 ரூபாவும் கிடைக்கும். இதற்கு முன்னர் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு வழங்கப்பட்ட 3,600 ரூபா, 10,500 ரூபாவாக கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அனர்த்த நிலைமையை விரிவான அனர்த்தமாக அறிவித்து வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டு இலக்கம் 03 சுற்றறிக்கையின் மூலம் நிவாரண சேவைகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதேச செயலாளர்கள் 50 மில்லியன் ரூபா வரையிலான கொள்வனவு நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்ள முடியும். அத்துடன், பணத்தை நேரடியாக வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்குப் பதிலாக, பிரதேசக் குழுக்களை அமைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிவாரண சேவைகள் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை அல்லது தகவல் இருந்தால், 011-2665258 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தைத் தொடர்புகொள்ளலாம். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 அவசர அழைப்பு இலக்கமும் திறந்திருக்கும்.
Tags:
News