இலங்கையைப் பாதித்த தித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையை எதிர்கொள்வது மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டுள்ளது.
அடுத்த புதன்கிழமை, அதாவது டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி கொழும்பு, மல் வீதியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தங்களின் போது ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில், தற்போதைய சூழ்நிலையில் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
குறிப்பாக 2003 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுகளின் போதும், வெள்ளத்திற்குப் பிந்தைய காலப்பகுதியிலும் பின்பற்றப்பட்ட வெற்றிகரமான வேலைத்திட்டங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி இங்கு கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக தலைவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பாரிய அனர்த்த நிலைமைக்குப் பின்னர், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் அதற்கு வெளியேயுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒரே மேசைக்கு அழைக்கும் முதல் சந்தர்ப்பம் இது எனவும் வஜிர அபேவர்தன மேலும் குறிப்பிட்டார்.
Tags:
Political