லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (16) உத்தரவிட்டார்.
பணமோசடிச் சட்டத்தின் கீழ் ஊழல் குற்றத்தைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அவர் விளையாட்டு, தனியார் போக்குவரத்து மற்றும் கால்நடை வளர்ப்பு அமைச்சுகளின் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், 573 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமாகப் பெற்றதாகவும், இரண்டு வருடங்கள் போன்ற குறுகிய காலத்தில் சட்டபூர்வமாகப் பெற்ற விதத்தை வெளிப்படுத்தத் தவறிய 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை (ரூ. 57,347,956.98) வைத்திருந்ததாகவும் லஞ்சச் சட்டத்தின் 23 (அ) (1) பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
2015 மார்ச் மாதம் பெறப்பட்ட ஒரு அநாமதேய மனுவின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டதுடன், 2011 மார்ச் 31 முதல் 2013 மார்ச் 31 வரையிலான காலப்பகுதியில் சந்தேகநபரால் குறித்த பணம் சட்டவிரோதமாகப் பெறப்பட்டது என லஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது. ராகல பிரதேசத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான காணியை கொள்வனவு செய்தமை,
'என் பி ஆர் சன்' என்ற பெயரில் கூட்டு வர்த்தகத்தை நடத்திச் சென்றமை, சுங்க வரி அற்ற வாகன அனுமதிப்பத்திரங்களைப் பெற்றமை, அத்துடன் நண்பர்களின் துபாய் பயணங்களுக்காகப் பணம் செலவழித்தமை மற்றும் இறந்த சகோதரர் ஒருவரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தைப் பெற்றமை உள்ளிட்ட பல விடயங்கள் 2023 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
நீதவான் சந்தேகநபரை தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், அவரது வெளிநாட்டுப் பயணங்களையும் தடை செய்ய உத்தரவிட்டார்.