காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் பூஸ்ஸா அதி உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் மீது இரண்டு கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சிறைச்சாலைக்குள் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மதிய உணவு தாமதமானமை, கைதிகளின் சிறை அறைகளை மாற்றுதல் மற்றும் ஒரு சிறைச்சாலை அதிகாரியைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு குழுவினர் கலவரமாக நடந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். அந்த நேரத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்த உதவிச் சிறை அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.
அங்கு இரண்டு கைதிகள் உதவி அத்தியட்சகரின் முகத்தில் தாக்கியுள்ளனர். இதனால் அவரது மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறியதால், சிகிச்சைக்காகக் கராப்பிட்டிய மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துடன் சிறைச்சாலைக்குள் நிலவிய பதற்றமான நிலை மேலும் அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், ஏற்பட்ட நிலைமையைக் கட்டுப்படுத்த காலி சிறைச்சாலையிலிருந்தும் அதிகாரிகள் குழுவொன்று வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாலைக்குள் சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நிலைமையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
Tags:
News