குளியாப்பிட்டிய, திவியாவல சந்தியில் அமைந்துள்ள ஒரு கடைக்குச் சொந்தமான கொட்டகைக்குள் நேற்று (29) ஒரு பச்சிளம் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அலைந்து திரியும் ஒரு பெண் நாய் அந்தக் கொட்டகையில் போட்டுவிட்டுச் சென்ற நாய்க்குட்டிகளுக்கு உணவு கொடுக்கச் சென்றபோது இந்தக் குழந்தையின் சடலம் காணப்பட்டதாக குளியாப்பிட்டிய தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுமார் ஐந்து நாட்கள் வயதுடைய இந்தக் குழந்தை, இறந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டபோது, இரண்டு கால்களும் ஒரு கையும் இல்லாமல் இருந்துள்ளதுடன், கைவிடப்பட்ட இடத்தில் விலங்குகள் அவற்றை உண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ஏதோ ஒரு இடத்தில் கைவிடப்பட்ட இந்தக் குழந்தையை ஒரு பெண் நாய் எடுத்து வந்து கொட்டகையில் போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் மேலும் நம்புகின்றனர்.
சம்பவம் குறித்து பொலிஸ் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, குளியாப்பிட்டிய தலைமையகப் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யூ. ரத்நாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. அங்கு குழந்தையின் சடலம் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை நடத்துவதற்காக குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பிரதம சட்ட வைத்திய அதிகாரி, விசேட வைத்தியர் அஜித் ஜயசேனவிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் குறித்து எந்தத் தகவலும் பொலிஸாருக்குத் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.