கடந்த நாட்களில் நாட்டில் நிலவிய "திட்வா" சூறாவளியின் தாக்கம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஹக்கலை தேசிய தாவரவியல் பூங்கா, சுற்றுலாப் பயணிகளுக்காக இன்று (25) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்கள ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட துரித புனரமைப்புத் திட்டத்தின் காரணமாகவே பூங்கா மீண்டும் திறக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையம் வழங்கிய பரிந்துரைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு முழுமையாக இணங்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், பூங்கா வளாகத்தில் மேலும் மண்சரிவுகள் அல்லது மண்மேடுகள் இடிந்து விழும் அபாய அறிகுறிகளைக் காட்டும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அந்த இடங்களில் ஆபத்து குறித்த அறிவிப்புப் பலகைகளை காட்சிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே, பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக அந்த அபாயகரமான பகுதிகளுக்குள் நுழைவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட இந்த அபாயகரமான பகுதிகளில், பூங்காவின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள குளங்கள் நிறைந்த பகுதியும், வனப்பூங்கா நோக்கிச் செல்லும் பாதையும் அடங்கும். இந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், பூங்காவைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தாவரவியல் பூங்கா ஊழியர்கள் ஒரு விசேட திட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக மூடப்பட்ட ஹக்கலை தாவரவியல் பூங்காவை விரைவாக வழமைக்கு கொண்டு வந்து மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக, கடந்த 12ஆம் திகதி சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி அவர்களும் ஒரு விசேட கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.
இலங்கையில் அமைந்துள்ள அழகான தாவரவியல் பூங்காக்களில் முதன்மையான இடத்தைப் பிடிக்கும், 1861 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தாவரவியல் பூங்கா ஹக்கல, நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5400 அடி உயரத்தில் அமைந்துள்ளதால், இது ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான காலநிலையைக் கொண்டுள்ளது.