நிலச்சரிவில் காணாமல் போன நெத்துகியின் சடலம் மீட்பு

body-of-netuki-who-disappeared-in-landslide-found
 யட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரன்னாவ, தென்னவத்த பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் காணாமல் போயிருந்த சிறுமியின் சடலம் நேற்று (14) பகல் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பெரன்னாவ மகா வித்தியாலயத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்று வந்த ஏழு வயதுடைய நெத்துகி சஹன்யா என்ற சிறுமி ஆவார்.

தென்னவத்த பிரதேசத்திலிருந்து பத்தனேகல நோக்கிச் செல்லும் வீதியைச் சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், அவ்விடத்திற்கு அருகில் ஒரு நாய் நின்றதைக் கண்டு, அது குறித்து அவதானித்தபோது இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


அவ்விடத்தில் இருந்தவர்கள் மேற்கொண்ட மேலதிக தேடுதலின் போது, கித்துல் மரத்தின் கிளைகளுக்கு அடியில் புதையுண்ட நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக யட்டியாந்தோட்டை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 27ஆம் திகதி பிற்பகல் ஏற்பட்ட இந்த துரதிர்ஷ்டவசமான நிலச்சரிவு சம்பவத்தில், குறித்த சிறுமியின் தாய், தந்தை, இளைய சகோதரன் மற்றும் பாட்டி ஆகிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மண்மேட்டுக்குள் புதையுண்டனர். இந்த அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு சிறுமியின் தாயின் சடலம் மீட்கப்பட்டதுடன், தந்தை, சகோதரன் மற்றும் பாட்டியின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை.

சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது கருவனெல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


gossiplanka image 2

Post a Comment

Previous Post Next Post