ஒரு கிராம உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் திட்டி, மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில், தேசிய மக்கள் சக்தி சார்பில் புத்தளம் பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உறுப்பினர் இன்று (26) முந்தலம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் புத்தளம் பிரதேச சபையின் மங்கலஎலிய பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் விமல் ரோஹண என்ற உறுப்பினராவார்.
கடந்த 05ஆம் திகதி மங்கலஎலிய கிராம உத்தியோகத்தர் அனர்த்த கடமைகளுக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சந்தேகநபரான உறுப்பினர் ஓட்டி வந்த சிறிய லொறி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த உறுப்பினர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். தான் பிரதேச சபை உறுப்பினர் என்றும், கிராம உத்தியோகத்தர் பதவி தனக்கு சம்பந்தமில்லாதது என்றும் கூறி, ஆபாச வார்த்தைகளால் திட்டி, சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமையாற்ற விடமாட்டேன் என சந்தேகநபர் அச்சுறுத்தியதாக கிராம உத்தியோகத்தர் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முந்தலம் பிரதேச செயலாளர் தலையிட்டு இரு தரப்பினரையும் சமரசம் செய்ய முயன்ற போதிலும், கடந்த 08ஆம் திகதி மீண்டும் தொலைபேசி மூலம் பேசி உறுப்பினர் தன்னை அச்சுறுத்தியதாக கிராம உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் சம்பவம் மற்றும் தனது வீட்டிற்கு தண்ணீர் வழங்காதது குறித்து விசாரித்தபோது, உறுப்பினர் இவ்வாறு இரண்டாவது முறையாக அச்சுறுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட புகார் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை முந்தலம் பொலிஸ் நிலையத்திற்கு வந்தபோது சந்தேகநபரான உறுப்பினர் கைது செய்யப்பட்டார். அவர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.