மாத்தறை காகனதுர பிரதேசத்தில் வசித்து வந்த 17 வயது இளைஞன் கடந்த (20) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மாத்தறை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். வேலையை முடித்துவிட்டு கிரைண்டர் சுவிட்சை அணைக்காமல் வயரை கையால் தூக்கும்போது இந்த விபத்து நடந்துள்ளது.
மாத்தறை மெத்தவத்த தொழிற்பயிற்சி கல்லூரியில் அலுமினிய கைவினைப் பாடநெறியைப் படித்து வந்த யசிரு ரஷேன் (17) என்ற மாணவனே துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் நடந்தபோது, அவர் தனது தந்தையின் வேலைக்கு உதவுவதற்காகச் சென்றிருந்தார்.
சம்பவத்திற்கான காரணம், கிரைண்டரின் வயரில் இருந்த கோளாறு காரணமாக மின்சாரம் தாக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்த மாணவன் க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்றதுடன், பின்னர் ஒரு தொழிற்பயிற்சி கல்லூரியில் பாடநெறியை கற்கச் சேர்ந்திருந்தார். வார இறுதி விடுமுறை நாட்களில் அவர் தனது தந்தையுடன் வேலைக்குச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞனின் மரண பரிசோதனை மாத்தறை பொது மருத்துவமனையில் நடத்தப்படவுள்ளது. மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த ஜயமினி குமாரவின் பணிப்புரையின் பேரில் மாத்தறை தலைமையகப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.