
பதுளை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக தடைப்பட்டிருந்த பொதுப் போக்குவரத்து சேவைகளை மீண்டும் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேருந்துகள் இயக்கத்திற்கு உகந்த நிலையில் உள்ள அனைத்து வீதிகளிலும் மீண்டும் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என பதுளை டிப்போ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் ஏற்பட்ட இந்த அனர்த்த நிலை காரணமாக பிரதான வீதிகள் உட்பட சுமார் 165 வீதிகள் சேதமடைந்திருந்தன. எவ்வாறாயினும், துரிதமாக மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புத் திட்டத்தின் கீழ், இதுவரை சுமார் 111 வீதிகளின் பணிகள் நிறைவடைந்துள்ளன. புனரமைக்கப்பட்ட அனைத்து வீதிகளிலும் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில், மேலும் சில வீதிகளின் புனரமைப்புப் பணிகள் தொடர்வதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக, அட்டம்பிட்டிய - வெலிமடை, பதுளை - ஸ்பிரிங்வெலி, மடோல்சீமை - மெட்டிகஹதென்ன, பஸ்ஸறை - நமுனுகுல, கலஉட - வாசநாகம மற்றும் பஸ்ஸறை - லூணுகல ஆகிய வீதிகளில் இந்த புனரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Tags:
News